கலெக்டர் உத்தரவையும் மீறி தடையில்லாமல் நடக்கும் கிராவல் மண் கடத்தல்! | Sand smuggling in karur with the help of officers

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (13/02/2018)

கடைசி தொடர்பு:20:20 (13/02/2018)

கலெக்டர் உத்தரவையும் மீறி தடையில்லாமல் நடக்கும் கிராவல் மண் கடத்தல்!

கிராவல் மண் கடத்தல்

கரூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் துணையுடன் இரவு பகலாகக் கிராவல் மண் கடத்தல் நடப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள நங்கவரம் வருவாய் கிராமத்தில் உள்ள இனுங்கூர் பஞ்சாயத்து வைரபுரி நகரில் உள்ள குளத்தில் கிராவல் மண் கடத்தல் நடப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி நம்மிடம் பேசிய அவர்கள், "இந்தக் குளத்தில் சட்டத்தை மீறி வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆதரவுடன், இரவு பகல் என்று 24 மணி நேரமும் கிராவல் மண் கடத்தல் நடக்கிறது.

இதேபோல், அருகில் உள்ள முதலைப்பட்டி, நெய்தலூர், சேப்பளாப்பட்டி, ஆலத்தூர் பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து கிராவல் மண் கடத்தல் நடக்கிறது. அதேபோல், தோகைமலை வருவாய் கிராமத்தில் உள்ள தென்றல் நகரில் 10 ஏக்கர் நிலத்தில் கிராமல் மண் மற்றும் காட்டுவாரி மண் கடத்தப்பட்டு வருகிறது. இப்படி பல பகுதிகளில் தொடர்ச்சியாக நடக்கும் மண் கடத்தல் பற்றி மாவட்டக் கலெக்டர் கோவிந்தராஜுக்குப் புகார் கொடுத்தோம்.

அவர் உடனே குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி, ஆர்.ஐ-க்கள் வெங்கடேசன், கணேசமூர்த்தி ஆகியோரைக் கண்டித்ததோடு, 'மண் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். ஆனால்,வருவாய்த்துறை அதிகாரிகள் மண் கடத்துபவர்களிடம் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு, ஒரே ஒரு வண்டியை மட்டும் பிடித்து, கணக்கு காட்டிவிட்டு தொடர்ச்சியாக மணல் அள்ள அனுமதிக்கிறார்கள். இதனால், இந்தப் பகுதிகளில் புதிது புதிதாக மண் கடத்துபவர்கள் உருவாகி, தடையில்லாமல் மண்ணைக் கடத்துகிறார்கள். மாவட்டக் கலெக்டர் கண்டிப்பையும் மீறி வருவாய்த்துறை அதிகாரிகள் மண் கடத்துபவர்களுக்குத் துணை போகிறார்கள். மண் கடத்தலைத் தடுக்கலேன்னா, போராட்டம்தான்" என்றார்கள்.