வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (14/02/2018)

கடைசி தொடர்பு:19:30 (14/02/2018)

ஊர் உலகத்துல இவங்கதான் காதலிக்கிறாங்களாம் பாஸ்!

காலம் உண்டு... கடமை உண்டுன்னு இருந்த ஒருத்தருக்குள்ள காதல் வந்துட்டா, அதுக்கு அப்புறம் அவங்க நடவடிக்கையே தலைகீழா மாறிப்போயிடும்! துபாய் போயிட்டு உள்ளூருக்கு வந்த வடிவேலு எப்படி அலப்பறை பண்ணினாரோ, அதேபோல இவங்க பண்ற அலப்பறைக்கும் பஞ்சமே இருக்காது பாஸ்! காதல் அலப்பறைகள் என்னென்னனு காட்சி ரீதியா பார்க்கலாமா?!

 

காதல்

செல்போன், வாட்ஸ்அப்னு வந்ததிலிருந்தே குடும்பத்துல ஒருத்தருக்கொருத்தர் பேசுவதையே குறைச்சுக்கிட்டோம். இதுல கூடுதலா காதலும் வந்துட்டா, குடும்பத்தைவிட்டே தனியா, தனித்தீவா போயிடுவாங்க. தனி ரூம்லயோ, மொட்டைமாடியிலயோதான் மொபைலும் கையுமா திரியுவாங்க. எந்நேரம் கால்/காதல் வரும்னு சொல்ல முடியாதே! கால்/காதல் வந்துடுச்சுன்னா குட்டி போட்ட பூனை மாதிரி நடுராத்திரியில மொட்டைமாடியில வாக்கிங் போயிட்டே பேசுவாங்க. இதுவே கார்ப்பரேட் ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்களா இருந்தா, மொட்டைமாடியில ஆளுக்கு ஒரு மூலையைப் புடிச்சு நின்னுக்கிட்டு பேசிட்டே இருப்பாங்க. இப்பவாவது ஆளுக்கொரு செல்போன் கையில இருக்கு... செல்போன் அறிமுகமாகாத காலத்துல ஆபீஸ் லேண்ட்லைன் பில்தான் எகிறும்!

காதலிக்கிற பொண்ணுகிட்ட ஒட்டுமொத்தமா வழிஞ்சு பேசிடுறதால, எங்கே ரகசியத்தை உளறிக்கொட்டிடுவோமோனு பயந்து, சிடுசிடுன்னு பேசி, வீட்டுல யாரும் நெருங்கவிடாமலேயே வெச்சிருப்பாங்க. இதையெல்லாம் மீறி, வீட்டுல யாருக்காவது இவங்களோட காதல் தெரிஞ்சுப்போச்சுன்னா, அவங்களை மட்டும் தாஜா பண்ணி வெச்சிப்பாங்க. அதேபோல வீட்டுல பூனை, நாய்னு வளர்த்தா அதுங்களை கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சி மிரளவைப்பாங்க!

அந்தந்த சீசன்ல ஏதாவது சாங் இவங்களுக்கு ஃபேவரைட்டா இருக்கும். டிவி-யிலயோ எஃப்.எம்-லயோ அந்தப் பாட்டு வந்துட்டா போதும், வால்யூமை ஃபுல்லா வெச்சு அலறவிட்டுக் கேட்பாங்க. அப்படிப்பட்ட பாடல்கள், `ரோஜா ரோஜா... ரோஜா ரோஜா...', `சிநேகிதனே... சிநேகிதனே..!', `கண்ணாளனே...!', `கொஞ்சிப் பேசிட வேணாம்...' இப்படி பெரிய லிஸ்ட்டே இருக்கு. ஒரே பாட்டை மாற்றி மாற்றிக் கதறக்கதற போட்டுக் கேட்டுக்கிட்டே இருப்பாங்க.

பொண்ணுங்க லவ் பண்றப்ப அம்புட்டு மேக்கப் போடுவாங்க... கண்ணாடியே வெறுப்பாகி, `கொஞ்சம் நகர்றியா?'னு கெஞ்சிக் கேட்கிற அளவுக்கு அது முன்னாலயே நின்னுக்கிட்டிருப்பாங்க. பீச்ல ஜோடிபோட்டுக் கொஞ்சவேண்டியதுதான்... அதுக்காக பஸ்ல அவ்வளவு கூட்டம் இருக்கிறப்பவும் கொஞ்சிக்கிட்டேதான் வரணுமா? அத்தனை மக்களும் முகத்தைச் சுளிச்சாலும் கொஞ்சுறதுலேயே காதலும் கருத்துமா இருப்பாங்க. காலம் கடந்தும் காதலி கிடைக்காத வெர்ஜின் பசங்களோட சாபம் பொல்லாதது பாஸ்... இதுக்குமேலயும் ஒட்டிக்கோ கட்டிக்கோன்னா உங்க இஷ்டம்!

அதென்னங்க, காதலிக்கிறவங்கன்னாலே பைக்ல ஃபுல் ஸ்பீடுல பறக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா? அதுவும் பாம்பு மாதிரி பின்னிக்கிட்டுப் பறக்கிறப்போ, இவங்களை வேடிக்கை பார்க்கவே ஒரு கூட்டம் அவங்களைத் துரத்தும். இதனாலதான் அங்கங்க ஆக்ஸிடென்ட் நடக்கிறதே!
 

காதல்

இதுல வேலைவெட்டி எதுவும் இல்லாம, காதலிக்கிறது மட்டுமே வேலையா வெச்சிருக்கிறவங்க வீட்டுல, சிக்கலோ சிக்கல்தான்! செலவுக்கு எவ்வளவு பணம் குடுத்தாலும் கட்டுபடியாகாது. பணத்தை எங்க பதுக்கினாலும் ஆட்டையைப் போடுறதுல எக்ஸ்பர்ட் அந்தக் காதல் மன்னர்கள். ஒருவேளை நல்ல வேலையில இருக்கிறவங்களா இருந்தா, என்னவோ கல்யாணம் முடிஞ்சு குடும்பம் நடத்துற மாதிரியே காதலிக்கிற காலத்துலேயே செல்போன் ரீசார்ஜ் பண்றதுல இருந்து டிரெஸ் எடுத்துக் குடுக்கிறது, பேக் வாங்கிக் குடுக்கிறது, மோதிரம், நெக்லஸ், வளையல்னு அம்புட்டையும் தவணைமுறையில் தாரைவார்ப்பாங்க. அவ்ளோ செலவழிச்சும் காதல் புட்டுக்கிச்சுன்னா பஸ் கட்டணம் ஏத்தினா மாதிரி புலம்பிட்டே திரியவேண்டியதுதான்!  

இவங்களுக்கு ஃப்ரெண்டா வாய்ச்சவங்க நிலைமை அந்தோ பரிதாபம்! கூட சுத்திக்கிட்டே இருப்பாங்க, திடீர்னு போன் வந்ததும் கழண்டுக்குவாங்க. அதேபோல பைக்ல போறப்ப டிரைவர் வேலைபார்க்கணும், படத்துக்குப் போறதா இருந்தா டிக்கெட் புக் பண்ணிக் கொடுத்ததோடு ஒதுங்கிக்கணும். கூட சேர்ந்து ஹோட்டலுக்குப் போனால் பில்லுக்குப் பணம் குடுக்கிறது இவங்களாத்தான் இருக்கும். அதேபோல மறக்காம ரிஜிஸ்டர் ஆபீஸ்ல சாட்சிக் கையெழுத்து போடப் போயிடணும். ஏதாவது பிரச்னைன்னா, மொத வெட்டு நண்பேண்டாவுக்குத்தான்! நண்பர்கள் தயவுலதான் அவன் காதலை வளர்ப்பான். அவனுக்கு பைக் குடுக்கிறது, செல்போன் குடுக்கிறது, செலவுக்குப் பணம் குடுக்கிறதுன்னு அல்லாமே நம்ம செலவுதான். ஆனா, இதை நாம அட்வான்டேஜா எடுத்துக்கக் கூடாதுனு ஸ்டார்ட்டிங்லேயே நம்மள அவன் ஆளுக்கு `அண்ணா'னு அறிமுகப்படுத்துவான்!
 

காதல்

உலக விஷயத்தையெல்லாம் போன்ல மணிக்கணக்கா பேசுவாங்க. இடையில நாம குறுக்கிட்டா, கடுப்பாகி வெயிட் பண்ணச் சொல்வாங்க... ரொம்ப நேரமா வழிஞ்சு, அதுல பலமுறை வழுக்கி விழுந்த பிறகு, `என்ன மச்சான், ரொம்ப நேரமா வெயிட்டிங்கா? ஸாரிடா! மாலுவோட புஜ்ஜிம்மாவுக்கு ரெண்டு நாளா ஃபீவராம்டா! ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருந்தா... அதான், சமாதானம் பண்ண கொஞ்சம் நேரமாகிடுச்சு'னு சப்பைக் காரணம் சொல்லி கடுப்பேத்துவான். இவன் போன் பேசி முடிக்கிறதுக்குள்ள டி.வி-யில டி20 மேட்சே முடிஞ்சிருக்கும்!

எங்கேயாவது பிக்னிக் போகலாம்னு பெரிய அளவுல ப்ளான் போடுவோம். அவனும் ஓ.கே சொல்லுவான்... கரெக்டா அன்னைக்குன்னு அவகிட்டருந்து கால் வரும். உடனே நம்மள கழட்டிவிட்டுட்டு அவன் ஆள்கூட சுத்துறதுக்கு இவன் தனியா ப்ளான் போடுவான். ``மச்சான், உங்ககூட வந்தால் நானும் சரக்கடிப்பேன்னு சந்தேகப்படுறாடா, அவங்க அம்மா மேல சத்தியம் பண்ணாக்கூட நம்பமாட்றா. வேற வழி தெரியலைடா"னு சொல்லிட்டு,  ரவுண்டு அடிக்கக் கிளம்பிடுவான்! `மாமூ... அவ சரியில்லாத பொண்ணு'னு ஏதோ நமக்குத் தெரிஞ்சதை அவன்கிட்ட சொன்னா,  நண்பன்னுகூட பார்க்காம நம்மள புரட்டிப்போட்டு கொத்துபரோட்டா போட்டுறுவான்.

``காதல்னா என்னன்னு தெரியுமாடா? என் லவ்வரோட குணம் எப்படித் தெரியுமாடா? எங்க காதல் எம்புட்டுப் புனிதம்னு தெரியுமாடா? நாங்க எங்களோட பாஸ்வேர்டைக்கூட ஷேர் பண்ணிப்போம் தெரியுமாடா?"னு டயலாக்கை தம்கட்டி பேசிட்டு, லவ் பண்றவங்களுக்கு அதே பாஸ்வேர்டால பிரச்னையாச்சுன்னா, ``நண்பன்னா என்னன்னு அவளுக்குத் தெரியலை மச்சான். என்ன இருந்தாலும் நட்புதான்டா உசத்தி!''னு நம்ம சைடு வந்து `நண்பேன்டா' பன்ச் பேசுவாங்க!

அவனுக்கு அந்தப் பொண்ணு பிடிக்காமல் போயிடுச்சுன்னா, உடனே ``மச்சான், அவ சப்ப ஃபிகர்டா!"ல தொடங்கி என்னென்ன மாதிரியெல்லாம் அவளைப் பற்றி தரக்குறைவா பேச முடியுமோ, அத்தனையும் போதை இறங்கும் வரைக்கும் பேசுவாங்க!


டிரெண்டிங் @ விகடன்