செவிலியர் மணிமாலா மரணத்தில் நீடிக்கும் மர்மம்! - போராட்டத்தைத் தொடரும் சுகாதாரப் பணியாளர்கள்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தவர் செவிலியர் மணிமாலா. 25 வயதான இவர் கடந்த சனிக்கிழமை இரவு, தான் தங்கியிருந்த விடுதி அறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

மணிமாலா

அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் காங்கேயம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த அவரது பெற்றோர் உடனடியாக வெள்ளக்கோயிலுக்கு விரைந்தனர். மேலும் மணிமாலாவின் மரணத்துக்குச் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் தமயந்தியும், உதவி மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரியும்தான் காரணம் என்று மணிமாலாவின் பெற்றோர் புகார் தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள இரண்டு குழுக்கள், தினந்தோறும் வெள்ளக்கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளைச் சந்தித்து மருத்துவப் பரிசோதனைகள் செய்வது வழக்கம். மணிமாலா பணியாற்றிய குழுவின் தலைவரான உதவி மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி, தினமும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு பணிக்குச் செல்லாமல் தன் சொந்தக் காரியங்களுக்குச் சென்று வருவது தொடர்கதையாக இருந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8-ம் தேதியன்று வழக்கம்போல கையெழுத்துப் போட்டுவிட்டு மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி வீட்டுக்குச் சென்றுவிட, மணிமாலா மட்டும் தனியாகப் பணிக்குச் சென்றுவிட்டு வந்திருக்கிறார்.

இதனைக் கேள்விப்பட்ட தலைமை மருத்துவர் தமயந்தி, கடந்த சனிக்கிழமையன்று மணிமாலாவை அழைத்து, உதவி மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி 8-ம் தேதி பணிக்கு வராத தகவலை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கூறி கடுமையான சொற்களால் திட்டியதாகத் தெரிகிறது. சக்தி அகிலாண்டேஸ்வரியும் தன்னைப் பற்றி எதுவும் தலைமை மருத்துவர் தமயந்தியிடம் சொல்லக் கூடாது என்று மிரட்ட, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் மணிமாலா. மேலும் தான் செய்யாத தவறுக்காக மணிமாலாவுக்கு மெமோவும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வேதனையின் உச்சத்துக்குச் சென்ற மணிமாலா, தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

செவிலியர் மணிமாலாவின் மரணத்துக்கு நீதிகேட்டு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் காவல்துறை பல்வேறு முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித உடன்பாடும் ஏற்படாததால், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணிமாலாவின் மரணத்துக்குக் காரணமான 2 மருத்துவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் சக சுகாதாரப் பணியாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!