போலீஸ் கஸ்டடியில் பலியான இளைஞர்... சி.பி.ஐ விசாரணை கோரும் உண்மை கண்டறியும் குழு! | Ramnad youth Shaul Hameed died in police custody

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (13/02/2018)

கடைசி தொடர்பு:22:30 (13/02/2018)

போலீஸ் கஸ்டடியில் பலியான இளைஞர்... சி.பி.ஐ விசாரணை கோரும் உண்மை கண்டறியும் குழு!

கோவையில் போலீஸ் கஸ்டடியில் இளைஞர் சாகுல் ஹமீது உயிரிழந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என உண்மை அறியும் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.  

Pon Chandran

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. 19 வயது இளைஞரான இவர் வேலைவாய்ப்பு தேடி, கடந்த மாதம் கோவை மாவட்டம். மேட்டுப்பாளையத்துக்கு வருகை தந்தார். திருட்டு வழக்கு ஒன்றில், கடந்த மாதம் 22-ம் தேதி கைது செய்யப்படுகிறார். பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு தம்பதியின், பையைப் பறித்துவிட்டு, சாகுல் ஹமீது மற்றும் இப்ராஹீம் ஆகிய இருவரும் தப்பித்துள்ளனர். ஆனால், சிறிது தூரத்திலேயே அவர்கள் கீழே விழுந்து விடுகின்றனர்.

பின்னர், பொதுமக்கள் அவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே, காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகுல், கடந்த மாதம் 27-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், போலீஸ் கஸ்டடியில் வைத்து கடுமையாகத் தாக்கியதாலேயே, சாகுல் உயிரிழந்ததாக, பி.யூ.சி.எல் அமைப்பின் இணைச்செயலாளர் பொன்.சந்திரன் தலைமையிலான உண்மை கண்டறியும் அறிக்கை குழு குற்றம் சாட்டியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், பொன்.சந்திரன் தலைமையில், தேசிய மனித உரிமைகளின் கூட்டமைப்பு இறங்கியது. இதுதொடர்பான, அறிக்கை கோவையில் இன்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பொன்.சந்திரன் கூறுகையில், "சாகுல் ஹமீது மற்றும் இப்ராஹீம் திருடினார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர்கள் திருடியதற்கான சமூகக் காரணத்தையும் நாம் ஆராய வேண்டும். இரும்பு பைப், ராடு ஆகியவற்றின் மூலம் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். சாகுல் உயிரிழந்துவிட்டநிலையில், இப்ராஹீமுக்கும் கடுமையான காயங்கள் உள்ளன. இதுதொடர்பாக, சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும். இதில் சம்பந்தப்பட்ட போலீஸார் அனைவரையும் சஸ்பெண்டு செய்யவேண்டும்" என்றார்