வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (13/02/2018)

கடைசி தொடர்பு:23:00 (13/02/2018)

"தீண்டாமைக் கொடுமைகளில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!" - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ பகீர் குற்றச்சாட்டு

"தீண்டாமைக் கொடுமைகள் அதிக அளவில் நடக்கும் மாவட்டமாக புதுக்கோட்டை மாறிவிட்டது. இந்த விசயத்தில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும்"என்று ஏ.லாசர் கூறினார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஏ.லாசர் புதுக்கோட்டை வந்திருந்தார். இன்று பிற்பகல் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதற்கு முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் தலித்களுக்கு எதிரான பிரச்னைகளுக்குத் தீர்வு காணக்கோரி,மாவட்ட எஸ்பி செல்வராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ``தமிழகம் முழுவதும் தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைச் செயல்கள் இருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அது கொடுமையான முறையில் உள்ளது. கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இன்றும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதிலும் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாடு அவிழ்த்து விட்டால், `எங்களைக் கேட்காமல் எப்படி நீங்கள் காளைகளை அவிழ்த்துவிடலாம்?’ என்று ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தகறாறு செய்கிறார்கள். அதுமட்டுமன்றி, பொங்கல் விழாக்களைக் கொண்டாடுவதற்கு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்பீக்கர் கட்டினால்,'எப்படி நீங்கள் ஸ்பீக்கர் கட்டி பொங்கல் விழா கொண்டாடலாம். நீங்கள் போடுகிற பாட்டை நாங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டுமா?கட்டியிருக்கும் ஸ்பீக்கர்களை அவிழ்த்து விடுங்கள்' என்று சாதியக் கட்டுமானம் கொண்டவர்கள் மிரட்டும் சம்பவங்கள் இந்த மாவட்டத்தில் பெருகிவிட்டது.

அதுபோல, சாதிமறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவாக சட்டங்களிருந்தும் இந்த மாவட்டத்தில் பல இடங்களில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இந்த மாவட்டத்தில் சாதிமறுப்புத் திருமணங்கருக்குத் தடையாக இருப்பது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும்தாம். காதல் திருமணம் செய்பவர்களுக்குச் சட்டப்படி பாதுகாப்பு அளிக்க வேண்டும். 

புதுக்கோட்டை விளாம்பட்டியில் ஆதிக்கச் சாதியினர், தலித் இளைஞர்களை அரை நிர்வாணப்படுத்தித் தாக்கியிருப்பது கண்டனத்திற்குறியது. போலீஸார் இப்பிரச்னையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீண்டாமைக் கொடுமைகள் அதிக அளவில் நடப்பதும் தலித்துக்களுக்கெதிராக திட்டமிட்டத் தாக்குதல் நடத்துவதிலும் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. இந்தச் சூழல் மாற வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விரும்புகிறது. 

ஜெயலலிதா உருவப்படம் நேற்று சட்டசபையில் திறக்கப்பட்டதற்கு எழும் எதிர்ப்புகள் எங்களை பொறுத்தவரையில் ஆண் ஆதிக்கமோ, பெண்ணிய விடுதலைக்கு எதிரானதோ இல்லை, ஆனால், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவரின்  படத்தை புகழ்மிக்க சட்டமன்றத்தில் வைப்பது பொருத்தமற்றது. தவறான முன்னுதாரணமும் கூட.  நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு முறையான வேலை மற்றும் ஊதியம் வழங்கக் கோரியும், இந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் வருகின்ற மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.