வெளியிடப்பட்ட நேரம்: 10:17 (14/02/2018)

கடைசி தொடர்பு:19:37 (14/02/2018)

''தன்யஶ்ரீ பேசிட்டா... பிரேயர் பண்ண அத்தனை பேருக்கும் நன்றி!'' நெகிழும் தன்யஶ்ரீ தந்தை

சில வாரங்களுக்கு முன்பு, தண்டையார்பேட்டையில் தாத்தாவுடன் தெருவில் நடந்துசென்றுகொண்டிருந்தாள் நான்கு வயது சிறுமி தன்யஶ்ரீ. அப்போது, சிவா என்பவர் மாடியிலிருந்து  தன்யஶ்ரீ மீது விழுந்ததால், கோமா நிலைக்குச் சென்றுவிட்டாள். அந்தக் குழந்தைக்காகத் தமிழ்நாடே பிரார்த்தனை செய்தது. தற்போது, 'தன்யஶ்ரீ நலம் பெற்றுவிட்டாள்' என்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தன்யஶ்ரீ எப்படி இருக்கிறாள்... சாப்பிடுகிறாளா... முன்போலவே மாமா, அத்தை என மழலைக் குரலில் எல்லோரையும் அழைக்கிறாளா? தெரிந்துகொள்வதற்காக, அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றோம். பல நாள் உறங்காத கண்களின் சோர்வு நீங்கி, புன்னகையுடன் வரவேற்ற தன்யஶ்ரீயின் அப்பா ஶ்ரீதர், நம்மை ஐ.சி.யு. வார்டுக்கு அழைத்துச்சென்றார். 

நடந்த சம்பவத்தின் மிச்சமாகக் குழந்தையின் தலையில் பெரிய பேண்டேஜ், வலது காலில் மாவுக்கட்டு. கனவுலகில் விளையாடிக்கொண்டிருந்த தன்யஶ்ரீயை மென்மையாகத் தொட்டு, ''பாப்பா,  அத்தை உங்களைப் பார்க்க வந்திருக்காங்க பாருங்க'' என தன்யஶ்ரீயை எழுப்ப முயன்றார் தந்தை. 

தன்யஶ்ரீ அப்பாஅதைத் தடுத்து, அவருடன் பேசினோம். ''பாப்பாவுக்காக, இன்னிக்கு மரக்காணத்தில் இருக்கிற எங்க குலதெய்வமான புத்துப்பட்டு ஐய்யனார் கோயிலுக்குப் போயிட்டு வந்தேங்க. பெருசா ஒண்ணும் பண்ணலீங்க. தேங்காய் மட்டும் உடைச்சுட்டு வந்தேன். மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கேங்க'' என்றார். 

பக்கத்தில் நின்றிருந்த சகோதரிகளிடம், ''பாப்பா இன்னிக்கு என்ன சாப்பிட்டா?'' எனக் கேட்டார். ''கொஞ்சம் பருப்பு சாதமும், தயிர் சாதமும்'' என்றவர்கள், நம்மிடம், ''இந்த ஹாஸ்பிடலில் எல்லாருக்கும் தன்யஶ்ரீ ரொம்ப செல்லம். அவகிட்டே பத்து நிமிஷம் பேசிட்டா, ஃப்ரெண்டு பிடிச்சுடுவா'' என்கிறார்கள் பெருமையாக. 

தூக்கத்தில் தன்யஶ்ரீ புரள, தலையின் முன்பகுதியில் ஆபரேஷன் செய்து போடப்பட்டுள்ள பேண்டேஜையும் தாண்டி தெரியும் மெட்டல் கிளிப்ஸ் கழன்றுவிடுமோ எனப் பதறுகிறார் ஶ்ரீதர். ''அந்த கிளிப்பை இன்னைக்கு நீக்கப்போறதா சொல்லியிருக்காங்க'' என தன்யஶ்ரீயின் அத்தை சொல்ல, ஶ்ரீதர் முகத்தில் நிம்மதி ரேகைகள். 

நர்ஸ் ஒருவர் தன்யஶ்ரீயின் வார்டுக்கு வர, அவரின் குரல் கேட்டதும் குழந்தை கண் விழித்துவிட்டாள். தலையில் இருக்கும் காயம், கால் பேண்டேஜை மறந்து, அப்பாவிடம் தாவப் பார்க்கிறாள். 'டேய் பாப்பா' என்றபடி அருகில் சென்ற அப்பாவின் கைகளையும் தன் பிஞ்சுக் கரங்களுக்குள் அடக்கிக்கொண்டு, ''அப்பா, நான் இன்னிக்கு பப்பு பூவா சாப்பிட்டேன்; ரெட் கலர் லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டேன்; ஈவினிங் பொமொகிரானட் ஜூஸ் குடிக்கப்போறேன்'' என்று வட்டக் கண்களை விரித்து, கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறாள். 

குறுக்கிட்ட நர்ஸ், ''நான்தானே பாப்பாவுக்கு லிப்ஸ்டிக் கொடுத்தேன். அதை அப்பாக்கிட்டே சொல்லலையே'' என்று எடுத்துக் கொடுக்க, ''அது பிங்க் கலர் லிப்ஸ்டிக்'' என்று சமர்த்தாக பதில் கொடுக்கிறாள் தன்யஶ்ரீ. 

மனம் நிறைவுடன் கிளம்பிய நம்முடன் வாசல் வரை வந்த தன்யஶ்ரீயின் அப்பா, ''என் குழந்தைக்காக நிறைய பேர் தேவைங்கிற அளவுக்கு பணம் கொடுத்து உதவி பண்ணிட்டாங்க. அது போதும். இன்னும் ரெண்டு மாசத்துல குழந்தையின் தலையில் இன்னொரு ஆபரேஷன் பண்ணணும்னு டாக்டருங்க சொல்றாங்க. அதிலிருந்தும் என் குழந்தை நல்லபடியா மீண்டு வரணுங்க. அதுக்காக, எல்லாரையும் கடவுள்கிட்ட வேண்டிக்கச் சொல்லுங்க போதும். உங்க ஆபீஸ்லேயும் எல்லாரும் பிரேயர் பண்ணிக்கோங்க. இப்போ என் குழந்தைக்குத் தேவை பணம், காசு இல்லீங்க. உங்க வேண்டுதல்தாங்க'' என்றபடி கைகூப்பி, கண் கலங்குகிறார். 

அந்தத் தந்தையின் வேண்டுதலை நிறைவேற்ற பல்லாயிரம் இதயங்கள் எந்த நொடியிலும் தயாராகவே உள்ளன.