வெளியிடப்பட்ட நேரம்: 23:39 (13/02/2018)

கடைசி தொடர்பு:23:39 (13/02/2018)

மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் ரயில் மறியல் போராட்டம்..!

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய இரயில்வேத் துறையை சீரழித்து வருவதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நாடு தழுவிய அளவில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்திலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலா தலைமையில் சேலம் மாவட்டச் செயலாளர் பிரவீன்குமார், திருப்பூர் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், தருமபுரி மாவட்டச் செயலாளர் எழில் அரசு, ஈரோடு மாவட்டச் செயலாளர் சகாதேவன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட் 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மறியலில் கலந்துக் கொண்டார்கள்.
முதலில் சேலம் ஜங்ஷனுக்கு முன்பு பக்கோடா சாப்பிட்டுக் கொண்டும், பொதுமக்களுக்கு பக்கோடா கொடுத்தும் ஊர்வலமாக வந்து சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்திற்குள் புகுந்து இரயில்வே டிரேக்கில் அமர்ந்து பக்கோடா மோடி ஒழிக! பக்கோடா மோடி ஒழிக!! என்று கோஷம் போட்டுக் கொண்டு மறியலில் ஈடுபட்டார்கள்.

இதுப்பற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் பிரவீன்குமாரிடம் பேசிய போது, ''நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்திய ரயில்வேத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் விதமாக மோடி தலைமையிலானா பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தப் பிறகு தொடந்து பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நிலை உருவாகி வருகிறது. இரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க நினைத்தால் நிச்சயம் இடதுசாரிகளும் இன்னும் பிற முற்போக்கு சக்திகளும் இணைந்து தடுத்து நிறுத்துவோம்.

இரயில்வே துறையில் 3 1/4 லட்சம் காலி பணியிடங்கள் இருக்கிறது. அதை மோடி அரசு நிரப்பாமல் ஓய்வூதியர்களையே மீண்டும் பணியமர்த்தும் வேலையை பார்க்கிறது. இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. மோடியிடம் கேட்டால் இளைஞர்கள் வேலையில்லாமல் இல்லை பக்கோடா விற்றுகூட சம்பாதிப்பதாக கூறிகிறார். இதைக் கண்டித்து இன்று இரயில் மறியல் போராட்டம் செய்தோம்'' என்றார்.