வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (14/02/2018)

கடைசி தொடர்பு:00:00 (14/02/2018)

இறால் பண்ணைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்..!

நிலத்தடி நீரைப் பாதிப்படையச் செய்யும் இறால் பண்ணைகள் அமைப்பதைத் தடுக்கக் கோரியும், தூர்வாறுதல் என்ற பெயரில் ஊரணிகளில் உள்ள மணல் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும் இரு கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இறால் பண்ணைக்கு எதிராக கிராம மக்கள் உண்ணாவிரதம்

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம் ஊராட்சி குடியிருப்புப் பகுதிகள், கடற்கரைப் பகுதியில் இருந்து மிக குறைவான தொலைவில் அமைந்துள்ளது. ஆனாலும் இப்பகுதிகளில் உப்புத்தன்மை இல்லாத நிலத்தடி நீர் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த நிலத்தடி நீரிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் சிலர், அரசு அதிகாரிகளின் துணையுடன் இறால் பண்ணைகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த ஊராட்சிகளில் உள்ள ஊரணிகளில் தூர்வாறுதல் என்ற பெயரில் மணல் திருட்டு நடப்பதாகவும் புகார் உள்ளது. 

இந்நிலையில் நிலத்தடி நீரினைப் பாதிக்கும் வகையில் ஏற்படுத்தப்படும் இறால் பண்ணைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேதாளை மக்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சதாசிவம் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தை மரைக்காயர் பட்டிணம் ஜமாத் தலைவர் அப்துல்நாசர் தொடங்கி வைத்தார்.