வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (14/02/2018)

கடைசி தொடர்பு:00:30 (14/02/2018)

கபினி அணையைத் திறப்போம்..! என்ற கோஷத்துடன் கர்நாடக நோக்கிச் செல்லும் தமிழக விவசாயிகள்

கர்நாடகம் நுழைவோம், கபினி அணைத் திறப்போம், கருகும் பயிரைக் காப்போம், என்ற எழுச்சியோடு கர்நாடக மாநிலத்தை நோக்கி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கர்நாடகாவை நோக்கிச் செல்லுகிறார்கள்.

இதுப்பற்றி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், ''கர்நாடகம் நுழைவோம்... கபினி அணைத் திறப்போம்... கருகும் பயிரைக் காப்போம்... தமிழக உரிமையை மீட்போம். என்ற எழுச்சியோடு இறுதிக்கட்டப் போராட்டமாக இன்று போய்க் கொண்டிருக்கிறோம். 6 ஆண்டுகளாக கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. பிரதமர் மோடி பதவியேற்றப் பிறகு 4 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக அரசை நம்பாமல் நீதிமன்றத்தை முழுமையாக நம்பினார். ஆனால் தற்போது இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு கர்நாடக அரசிடம் கடிதம் எழுதி மண்டியிட்டு இருக்கிறது. இது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம். தமிழர்களுக்கு பெருத்த தலைகுனிவு. கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி உச்ச நீதிமன்ற கூறுவதற்கு அதிகாரம் இல்லை என்று கூறி இந்திய அரசியல் சாசண சட்டத்தையே குழி தோண்டி புதைத்து விட்டார்.

மோடி அரசு தமிழகத்திற்கு இழைத்த துரோகத்தைக் கண்டுக்கொள்ளாமல் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க., அரசை ஜெயலலிதா ஆன்மா கூட மன்னிக்காது. மத்திய அரசால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டப் பிறகு மத்திய பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கர்நாட்காவில் கடந்த பத்து நாட்களாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நாங்கள் கர்நாடகாவிற்குள் நுழைந்து கபினியை திறக்க இருக்கிறோம்.

எங்கள் பயணம் காலையில் மன்னார்குடியில் இருந்து கிளம்பி தஞ்சைக்கு வந்து கரிகாலச்சோழனை வணங்கி விட்டு, திருச்சி ஶ்ரீரங்கநாதனிடம் மோடிக்கு நல்ல சிந்தனைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பிறந்த சேலம் மண்ணைத் தொட்டு முதல்வர் பழனிசாமிக்கும் நல்ல சிந்தனையை கொடுக்க வேண்டும் என்று தொழுது விட்டு கர்நாடகாவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.