மீனாட்சியம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டபம் சரிசெய்யும் பணி தீவிரம்!

தீ விபத்தில் சேதமடைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டபத்தைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மதுரையின் அடையாளமாக திகழும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2-ம் தேதி இரவு வீர வசந்தராயர் மண்டபத்தில் கடுமையான தீ பற்றியது. தீயணைப்பு படையினரும், பொதுமக்களும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்தை அடுத்து கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கூறி பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ளன. மீனாட்சியம்மன் கோயிலின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கொடுத்த பேட்டியால் இந்து அமைப்புகள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து பேசிய தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தர் ராஜன், ``அறநிலைத்துறை அறம் இல்லாத துறையாகச் செயல்படுவதாகவும் பொங்கல், புளியோதரை கொடுப்பதில் மட்டும் கவனமாக இருப்பதாகவும் பாதுகாப்பு வசதிகளில் எந்த ஒரு முன்னேற்றமும் காட்டுவதில்லை’’ என தமிழக அரசையும், இந்து அறநிலைத்துறையையும் கடுமையாகச் சாடினார்.

இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 6 மாதத்தில் சரி செய்துவிடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான வேலைகள் தொடர்சியாக நடந்துவரும் நிலையில் 20 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட வீர வசந்தராயர் மண்டபத்தில் 7 ஆயிரம் பரப்பளவு கொண்ட இடத்தில் உள்ள கட்டடம் இடிந்து விழாமல் இருக்க இரும்பு முட்டிகளை கொண்டு சரி செய்து வருகின்றனர். இந்த வேலைகள் முடிந்தபின் அதனைச் சரி செய்யும் பணிகளைச் செய்ய உள்ளதாக வல்லுனர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் மீதமுள்ள 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மெல்லிய கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு நுணுக்கமாக ஆய்வு செய்தபின், அதைச் சரிசெய்யும் பணிகளைச் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர் . இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!