வெளியிடப்பட்ட நேரம்: 02:23 (14/02/2018)

கடைசி தொடர்பு:02:23 (14/02/2018)

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு..!

தஞ்சை தமிழ் பல்கலைகழகத் துணைவேந்தர் பாஸ்கரன், பணி நியமனங்களில் முறைகேடுகள் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துணைவேந்தர் மீது மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வு சிறகுகள் மற்றும் ஆய்வு மாணாக்கர் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இது பொய்யான குற்றச்சாட்டு என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணாக்கர் கூட்டமைப்பினர் பதிலடி கொடுத்துள்ளார்கள்.

பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்ட பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு தகுதியில்லாத நபர்களை துணைவேந்தர் நியமனம் செய்துள்ளதாக, இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக இன்று தஞ்சாவூரில் ஆய்வு சிறகுகள் மற்றும் ஆய்வு மாணாக்கர் கூட்டமைப்பினர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினார்கள். இக்கூட்டமைப்பின் தலைவர் சிவக்குமார், ‘பல்கலைகழக மானியக்குழு வின் விதிமுறைகளுக்கு புறம்பாக, தகுதியற்ற நபர்களை துணைவேந்தர் நியமனம் செய்துள்ளார். ஒரு நியமனத்திற்கு 35 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார். அந்தந்த துறையைச் சார்ந்தவர்களைதான் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியராக நியமிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இது மீறப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு மற்றும் இன சுழற்சி முறைகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. பல்கலைகழகங்களின் வேந்தராக உள்ள தமிழக ஆளுநர் இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.