வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (14/02/2018)

கடைசி தொடர்பு:10:34 (14/02/2018)

விபத்தில் அடிபட்ட பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த மாவட்ட ஆட்சியர்..!

 '

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலிருந்து கரூரில் நடக்க இருந்த ஒரு ஆய்வுக் கூட்டத்துக்கு காரில் சென்றிருக்கிறார். அப்போது, திருமாநிலையூர் அருகே இவரது கார் போனபோது, இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. அதைக் கண்டதும், திருமாநிலையூர் ரவுண்டானாவில் காரைத் திருப்பி, விபத்து நடந்த இடத்துக்கு டிரைவரை ஓட்டச் சொல்லியிருக்கிறார். 

விபத்து நடந்த இடத்தில் போய் இறங்கி, இரண்டு டூவீலர்களும் மோதிக் கொண்டதில், ஒரு டூவீலரில் கணவரோடு வந்த தேன்மொழி என்ற இளம்பெண், பலத்த அடிப்பட்டு மயங்கிக் கிடந்திருக்கிறார். உடனே, அங்கிருந்து ஆம்புலன்ஸுக்குப் பேசியிருக்கிறார். இன்னொரு பக்கம், கரூர் அரசு மருத்துவமனை டீனுக்கு போன் அடித்து, விபரத்தைச் சொல்லி, டாக்டர்களை அலர்ட்டாக இருக்கச் சொல்லியி ருக்கிறார். அதோடு, கரூர் ஆர்.டி.ஓ, தாசில்தார், ஆர்.ஐ உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களையும் மருத்துவமனைக்குப் போகச் சொல்லியிருக்கிறார்.

அதற்குள் ஆம்புலன்ஸ் வர, தேன்மொழியை அதில் ஏற்றச்செய்து, 'நேராக அரசு மருத்துவமனை போகணும்' என்று டிரைவரிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, இவரும் மருத்துவமனை சென்றிருக்கிறார். ஆய்வுக் கூட்டத்தையும் கேன்சல் செய்திருக்கிறார். அங்கு தேன்மொழிக்கு அனைத்து டெஸ்ட்களையும் எடுக்கச் செய்தவர், சிகிச்சைக்குப் பிறகு கண் விழித்த தேன்மொழியைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, 'வாகனத்தில் செல்லும்போது பார்த்து கவனமா செல்லுங்கள்' என்று அறிவுரை கூறிவிட்டு அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார்.

இதற்கிடையில்,'விபத்துக்குள்ளான தேன்மொழி கர்ப்பமாக இருந்ததாகவும், சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதால், எந்தப் பிரச்னையும் வரவில்லை. ஆட்சியரின் மனிதாபிமானத்தோடுகூடிய விரைவான செயல், ஒரு பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறது' என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.