தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 8 பேருக்கு சிறை

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களைப் போராட்டம் செய்யத் தூண்டியதாக, ஒரு பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலை, சிப்காட் வளாகத்தில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த விரிவாக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலை அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள், தூத்துக்குடியில் கடந்த 2 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் சீருடையுடன் போரட்டத்தில் அமரவைத்தனர். இந்நிலையில், 13-ம் தேதி மதியம் போராட்டத்தில் ஈடுபட்ட 43 சிறுவர், சிறுமியர், 142 பெண்கள் உட்பட 257 பேர் கைதுசெய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது கைதுசெய்யப்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய 257 பேரை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்ட இடத்துக்கே சென்று, தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., கீதாஜீவனிடம் மனு அளித்தனர் ஊர்மக்கள்.

இந்நிலையில், 13-ம் தேதி இரவு,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களைப் போராட்டம்செய்யத் தூண்டியது உட்பட 5 பிரிவுகளின் கீழ்  பாத்திமா பாபு, மகேஷ், பிரபு, விமல், வேல்ராஜ், ஆல்பர்ட், சுர்ஜித், முருகன் மற்றும் துரைப்பாண்டியன் ஆகிய 8 பேர்மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஜே-3 நீதிபதி ரோஸ் கலா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 8 பேரையும் வரும் 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் மாவட்டச் சிறையில்  அடைக்கப்பட்டனர்.  

கைதுசெய்து  சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி, தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஊர் மக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸார் அவர்களை மண்டபத்திலிருந்து வெளியேற்றினர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!