''பேருந்துக்கட்டண உயர்வால் அரசுக்குதான் நஷ்டம்” கனிமொழி காட்டம்

'பேருந்துக் கட்டண உயர்வால் அரசுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டிருக்கிறது' என்று தி.மு.க எம்.பி.,கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

கனிமொழி

உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை வாபஸ் பெற அனைத்துக் கட்சிகள் சார்பில், கடலூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க எம்.பி., கனிமொழி, 'இந்த மேடையைச் சற்று திரும்பிப்பார்க்கும்போது எனக்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதே மேடையை (கூட்டனியை) சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் நாம் அமைத்திருந்தால், தற்போது இந்த கண்டனக் கூட்டத்தை நடத்துவதற்கான அவசியமே ஏற்பட்டிருக்காது. இத்தனை போராட்டங்களை தமிழ்நாடு சந்தித்திருக்கவேண்டிய அவசியமும் இருந்திருக்காது. நம் இந்திய நாடே திரும்பிப்பார்த்து சிரிக்கும் நிலை தமிழ்நாட்டுக்கு வந்திருக்காது. ஒரு முதலமைச்சர் மறைந்துவிடுகிறார். இன்னொருவர் முதலமைச்சர் ஆகிறார். அதற்குப் பிறகு என்ன பிரச்னை வந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர் விலக்கப்பட்டு இன்னொருவர் முதலமைச்சராகக் கொண்டுவரப்படுகிறார். முதலில் விலக்கப்பட்டவர், தர்மயுத்தம் என்று சொல்லி தியானத்தில் ஈடுபடுகிறார். அந்தத் தர்ம யுத்தமும் தனக்குத் துணை முதலமைச்சர் பதவி வாங்குவதற்கான யுத்தமாக மாறிவிடுகிறது. இத்தனைக் குழப்பங்கள், வேடிக்கைகள் நடக்கக்கூடிய இடமாக தமிழகம் என்றுமே இருந்ததில்லை.

கனிமொழி

இந்த ஆட்சி விரட்டியடிக்கப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தால்தான் தமிழகம் மீண்டும் தலைநிமிர்ந்து நடக்க முடியும். மக்கள்மீது அக்கறை இருக்கக்கூடிய, அவர்களின் கஷ்டங்கள், வலிகளை உணர்ந்திருக்கக்கூடிய எந்த அரசாவது, ஒரே இரவில் பேருந்துக் கட்டணத்தை ஏறத்தாழ 100 சதவிகிதம் உயர்த்த முடியுமா என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தற்போது, எத்தனை பேர் பேருந்தில் பயணம் செய்கிறார்கள்? அனைவருமே ரயிலிலும் ஷேர் ஆட்டோவிலும் நடந்தே செல்வதும் பரவாயில்லை என்றுதான் நினைக்கிறார்கள். அப்படியான நிலைதான் தற்போது உருவாகியிருக்கிறது. இந்தக் கட்டண உயர்வின்மூலம் 38 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது அவர்களுக்கு வசூலாகும் பணம் வெறும் 28 கோடி ரூபாய்தான். இந்தக் கட்டண உயர்வால் அரசுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அனைவரும் பேருந்துகளில் செல்வதைத் தவிர்த்துவிட்டு வேறு வழிகளில் பயணங்களை மேற்கொண்டுவிட்டார்கள். மத்திய பட்ஜெட்டில் 24 மருத்துவக் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டது. வட மாநிலங்களுக்கு எல்லாம் மருத்துவக் கல்லூரிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில், தமிழ்நாட்டுக்கு எத்தனை வாங்கினீர்கள்? ஒரு மருத்துவக் கல்லூரியைக்கூட மத்திய அரசுடன் இனக்கமாக இருக்கும் இந்த அரசால் கொண்டு வர முடியவில்லை.

திமுக

ஒரு அமைச்சர் பேசுகிறார், 'இங்கிருக்கும் இளைஞர்களில் அ.தி.மு.க உறுப்பினர்கள் யாரைப் பார்த்து கை காட்டுகிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் வேலை என்று. அப்புறம் ஏன் பிள்ளைகள் படிக்க வேண்டும்? அ.தி.மு.க-வில் உறுப்பினர் அட்டை வைத்திருந்தால் மட்டும் போதுமே? எதற்குக் கல்விச் சான்றிதழ்? அமைச்சர் ஒருவர் இப்படிப் பேசலாமா என்றுகூட தெரியாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. எத்தனை செல்லூர் ராஜுகளைத்தான் நாம் தமிழகத்தில் தாங்கிக்கொள்வது? ஆற்றில் ஏன் இவ்வளவு கழிவுப்பொருள்கள் கலக்கின்றன? நொப்பும் நுரையுமாக வருகிறது என்று கேட்டால், 'பொதுமக்கள் சோப்பு போட்டு குளிக்கிறார்கள். அதனால் வருகிறது என்கிறார் ஒரு அமைச்சர். ஆற்றில் ஏன் தண்ணீர் குறைந்துவருகிறது என்று கேட்டால், மீன்கள் அதிகமாகிவிட்டன. அதனால் தண்ணீர் குறைந்துவிட்டது என்கிறார். இப்படி எதுவும் புரியாத,தெரியாத அமைச்சர்களைக் கொண்டதுதான் தற்போதைய அரசு. நாம் போராடிப் பெற்ற உரிமை வாக்குரிமை. அதை தயவுசெய்து யாருக்காகவும் எதற்காகவும் அடகுவைத்துவிடாதீர்கள். அதை உங்கள் உணர்வுகளை மதிக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாவதற்கும், அண்ணன் தளபதி அவர்கள் முதல்வராவதற்கும் அதைப் பயன்படுத்துங்கள். நன்றி' என்று முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!