பேருந்துக்கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சியில் தி.மு.க கண்டனப் பொதுக்கூட்டம்!

திமுக, dmk

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், பேருந்துக்கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியது. 

விழாவில் பேசிய திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, 'நான் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது நடந்த சில நிகழ்வுகளை இந்த இடத்தில் பதிவுசெய்ய விரும்புகிறேன். கழக ஆட்சியில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் நாங்கள் எப்படி ஆட்சி செய்தோமென்றால், பதினெட்டு முறை டீசல் விலை உயர்ந்திருக்கிறது. நாங்கள் சென்று தலைவரிடம் முறையிடுவோம். 'எப்படியாவது ஒரு பத்து பைசா சேர்த்துத் தாருங்கள்' என்று கேட்போம். 'உனக்கென்ன! டீசல் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு. அந்தப் பணத்தை நான் தர்றேன். அதை வச்சு சமாளிங்க' என்று சொல்வார். 

டீசல் பணத்தை அரசாங்கம் எங்களுக்குத் தந்தது. அதுமட்டுமல்ல, இரண்டு முறை ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. முதல் முறையாகப் போடும்போது 190 கோடி ரூபாய் அதிகமாக்கித் தரப்பட்டது. இரண்டாவது முறை 578 கோடி ரூபாய் அதிகமாக்கித் தரப்பட்டது. அதைவிட முக்கியமான ஒன்று, அரசு ஊழியர்களுக்கு எப்படி டிடிஏ தரப்படுகின்றதோ, அதேபோல போக்குவரத்துத் துறையினருக்கும் டிடிஏ தர ஆணையிட்டோம். அதனால்தான், இன்று ஒவ்வொரு தொழிலாளியும் 15,000 ரூபாய் சம்பள உயர்வு பெற்றிருக்கிறார்கள். இப்போது எங்கள்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, 'கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஓய்வூதியம் பெறும்போது தருகின்ற பணத்தை பாக்கி வைத்திருந்தோம்' என்று சொல்கிறார்கள். அதற்கு நான் கூறும் பதில், 'டீசல் விலை உயர உயர ஓய்வூதியப் பணம் தர தாமதமாவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அது, தாமதமாகும்போது பணமாக அரசாங்கத்துக்கு திரும்ப வராமல், பங்குத்தொகையாகத் தந்தது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நாங்கள் ஆட்சி முடிக்கும்போது தர வேண்டிய தொகை 900 கோடி. தற்போது, அந்த தொகை எவ்வளவு தெரியுமா? 5000 கோடி. அந்த 900 கோடியும் எங்களுக்கு எப்படி வந்தது என்றால், 1972 ல் வேலைக்குச் சேர்ந்தவர்கள் ஒரே சமயத்தில் ஓய்வு பெற்ற காரணத்தால், எங்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.' இவ்வாறு தனது ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றைப் பற்றி கூறினார் நேரு. 

இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தை  சிந்தாமணி, உழவர் சந்தை மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் நடத்த காவல் துறையினர் அனுமதி தரவில்லை. அதன் பிறகுதான், இந்தப் பொதுக்கூட்டத்தை கலைஞர் அறிவாலயத்திலே நடத்தி முடித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!