வெளியிடப்பட்ட நேரம்: 08:41 (14/02/2018)

கடைசி தொடர்பு:09:09 (14/02/2018)

விகடன் செய்தி எதிரொலி! - சாதி வன்கொடுமை செய்தவர்கள்மீது வழக்குப் பதிவுசம்பவம் நடந்த அந்த ஆலமரம்


பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை அரை நிர்வாணப்படுத்தி கைகளைக் கட்டிப் பொதுவெளியில் தாக்குதல் நடத்தி, அவமானப்படுத்திய சாதி வன்கொடுமை  சம்பவம் பற்றி நேற்று விகடன் இணையதளத்தில் செய்தி வெளியானது. இதனையடுத்து 14 பேர்கள் மீது சாதி ஒழிப்புத் தடுப்புச் சட்டம் உட்பட 16 பிரிவுகளின் கீழ் போலீஸார் நேற்று(13.02.2018) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வலையப்பட்டி  கிராமத்தில் நடந்த கோயில் அன்னதான விழாவில் விளாம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள் அதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த அந்த ஊரைச் சேர்ந்த  ஆதிக்கச் சமூகத்தினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது .இது தொடர்பான பிரச்னையில் தலித் இளைஞர்கள் ஐந்து பேரை மாற்று சமூகத்தினர் ஊர் பொதுவெளியில் அரை நிர்வாணப்படுத்தி பின்புறம் கைகளைக் கட்டி மண்டியிட வைத்து சாதிப் பெயரைக்  கேவலமாகக் குறிப்பிட்டுத் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதுமில்லை என்று பாதிக்கப்பட்ட இளைஞர்களில் மூன்று பேர் கடந்த திங்கட்கிழமை அன்று புதுக்கோட்டை ஆட் சியர்  கணேஷை நேரில் சந்தித்து  கோரிக்கை மனு கொடுத்தனர். அதில்,மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், 'வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்'என்று நம்மிடம் கூறி இருந்தார். 


 

இதனையடுத்து இன்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களிடம்  அன்னவாசல் போலீஸார் விரிவான விசாரணையை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட  பட்டியலின இளைஞர்களைத் தாங்கள் எப்படி அவர்களால் அவமானப்படுத்தப்பட்டோம். கீழ்த்தரமான வசவு வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டோம் என்பதைக் கூறி இருக்கிறார்கள்.  கூடவே,போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்ட தங்களிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு தங்களை செல்போன் திருடர்கள் என்றும் திருடிய மொபைல் போனைத் திருப்பித் தந்து விடுவதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் தந்ததைப்போல், போலீஸார் எழுதி இருந்ததையும் போலீஸாரிடமே அந்த இளைஞர்கள் மிக தைரியமாக விவரித்து இருக்கிறார்கள்.

விவகாரம் பெரிதாகிவிட்டதால், போலீஸாரும் அந்த இளைஞர்கள் சொன்னதைப் பொறுமையுடன் கேட்டிருக்கிறார்கள். அடுத்ததாக, சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் வலையப்பட்டி கிராமத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுசிந்திரன், பழனிச்சாமி, கணேசன், சதீஸ், லோகநாதன் உள்பட 14 பேர்கள் மீது 'சாதி ஒழிப்புச் சட்டம்' உட்பட 16 பிரிவுகளின்கீழ் அன்னவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறித்து விகடன் இணையதளம் வெளியிட்ட செய்தி பல்வேறு அமைப்புகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதில் முக்கியமானது. மனித உரிமைகள் அமைப்பு, தலித் சார்புடைய அமைப்புகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இடதுசாரிகளைச் சேர்ந்த மாணவ இயக்கங்கள் போன்றவை இந்த விவகாரத்தைக்  கையிலெடுத்து, இதில் மறைந்த, மறைக்கப்பட்ட சாதியக்கொடுமைகளை வெளிக்கொண்டு முயற்சிகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன.இதற்காக விளாம்பட்டி கிராமத்துக்கு அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் நேரில் வர இருக்கின்றனர்.