வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (14/02/2018)

கடைசி தொடர்பு:13:06 (14/02/2018)

"சக்ஸஸ் காதல்... காதலுடன் களப்பணி!" ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தம்பதிகளின் நன்நம்பிக்கை காதல் கதை #ValentinesDay

காதல் தம்பதிகள்
 

ங்கள் காதலை மனதில் சுமந்தவாறு வாழ்வின் இலக்கிலும் சரியாகப் பயணித்து, வெற்றியுடன் கரம்பிடித்த தம்பதியர், பலருக்கும் ரோல் மாடல். அவர்களின் வெற்றி, காதலுக்கும் லட்சியத்துக்கும் நன்னம்பிக்கை கதையும்கூட. அத்தகைய தமிழகத்தைச் சேர்ந்த சிவில் சர்வீஸ் தம்பதிகளின் காதலுடன் கூடிய களப்பணிகளின் தொகுப்பு... 

ஐஏஎஸ் தம்பதி: 
டாக்டர் கார்த்திகேயன் (கொல்லம் மாவட்ட ஆட்சியர், கேரளா) - டாக்டர் வாசுகி (திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர், கேரளா) 

காதல் தம்பதி

"சென்னை மருத்துவக் கல்லூரியில் 2003-ம் ஆண்டு பேட்ஜில் படிப்பைத் தொடங்கினோம். நிறைய சமூக விஷயங்களைப் பற்றியும் பேசுவோம். மருத்துவமே மக்களுக்கான சேவைப் பணிதான். ஆனால், சிவில் சர்வீஸ் பணியில் மக்களின் பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து தீர்வு காணமுடியும். அதனால் ரெண்டு பேரும் கலெக்டராக முடிவெடுத்தோம். எங்கள் நட்பும் காதலாக மாறிச்சு. போஸ்டிங் வாங்கின பிறகுதான் நம்ம காதலை இருவீட்டாருக்கும் சொல்லணும்னு உறுதியெடுத்தோம். 2007-ம் வருடம், எம்.பி.பி.எஸ் படிப்பு முடிஞ்சதுமே முழு ஈடுபாட்டோடு சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்குத் தயாரானோம். இப்போ மாதிரி எக்ஸாமுக்குப் படிக்கிறதுக்கான வசதிகள் அப்போ இல்லை. ஆளுக்கொரு போர்ஷன் படிச்சு, ஷேர் பண்ணியும், குரூப் டிஸ்கஷன் பண்ணியும் படிச்சோம். முதல் முயற்சியிலேயே இருவருக்கும் வெற்றி'' எனப் புன்னகைக்கிறார் வாசுகி. 

"வாசுகிக்கு ஐஏஎஸ் போஸ்டிங் கிடைச்சு மத்தியப்பிரதேசம் கேடர் ஒதுக்கப்பட்டுச்சு. ஆனால், எனக்கு ஐஎஃப்எஸ் பணி கிடைச்சது. அதுக்குப் போகாமல், மறுபடியும் எக்ஸாம் எழுதினேன். ஐஆர்எஸ் கிடைக்க, பணியில் இருந்துக்கிட்டே மறுபடியும் எக்ஸாம் எழுதினேன். மீண்டும் ஐஆர்எஸ் பணிதான் கிடைச்சது. அப்புறம், இருவீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் நடந்துச்சு. ஐஆர்எஸ் வேலையைத் தொடர்ந்தவாறு மறுபடியும் எக்ஸாம் எழுதினேன். இம்முறை ஐஏஎஸ் பணி கிடைத்து, கேரளா கேடர் ஒதுக்கப்பட்டுச்சு. இடைப்பட்ட காலத்தில் எங்க மனச்சூழலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 'உன்னால் முடியும்'னு ஒவ்வொரு நாளும் எனக்கு உற்சாக எனர்ஜியைக் கொடுத்தும், எனக்காக நோட்ஸை மெயில் பண்ணியும் பக்கபலமா இருந்தாங்க மனைவி வாசுகி. பல வருஷமா வெவ்வேறு மாநிலங்களில் பிரிவுச் சூழலில் பணியாற்றின நிலையில், 2012-ம் வருடம், வாசுகி கேரளாவுக்கே பணிமாறுதலாகி வந்துட்டாங்க. கூடுதல் மகிழ்ச்சியோடு எங்க களப்பணியை நேர்மையோடும் மனநிறைவோடும் செய்துட்டிருக்கோம்" என்கிற கார்த்திகேயன் குரலில் காதலும் கடமையும் நிறைந்துள்ளது. 

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தம்பதி: 
ஸ்வரூப் (டார்ஜிலிங் மாவட்ட கூடுதல் ஆட்சியர், மேற்கு வங்காள மாநிலம்) - ரம்யா பாரதி (பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறைக் கண்காணிப்பாளர், சென்னை) 

காதல் தம்பதி

"என் கொள்ளுத் தாத்தா, தாத்தா மற்றும் ரம்யாவின் அப்பா ஆகியோர் சிவில் சர்வீஸ் ஆபீஸர்களாகப் பணியாற்றியிருக்காங்க. இருவரின் அப்பாக்களும் நண்பர்கள். பி.ஏ., முடிச்சுட்டு தன் கனவின்படி 2007-ம் வருடம் முதல் முயற்சியிலேயே ரம்யா ஐபிஎஸ் போஸ்டிங்ல செலக்ட் ஆகிட்டாங்க. நான் பி.இ முடிச்சுட்டு, ரெண்டு முறை சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதியும் வெற்றி கிடைக்கலை. அந்தச் சூழலில் ஒருமுறை நாங்க மீட் பண்ணினோம். 'இந்த ஃபீல்டுல ஏழை மக்களுக்கு சர்வீஸ் செய்றதால் கிடைக்கும் மனநிறைவு வேற எதிலும் கிடைக்காது'னு ரம்யா சொன்னாங்க. தொடர்ந்து, சென்னையில் தங்கி சீரியஸா படிக்க ஆரம்பிச்சேன். படிப்பு சம்பந்தமா போனில் அடிக்கடி பேசிக்குவோம். எங்கள் நட்பு, காதலாக மாறிச்சு. நான் போஸ்டிங் வாங்கின பிறகுதான் ரெண்டு பேர் வீட்டிலும் சொல்லணும்னு இருந்தோம். 'நம்ம காதலும் கல்யாணமும் மத்தவங்களுக்கு மதிப்புமிக்க உதாரணமா இருக்கணும்' என உறுதியாக இருந்தோம். ரம்யா காஞ்சிபுரத்தில் ஏஎஸ்பி அண்டர் டிரெயினிங்ல இருந்தாங்க. ஞாயிறுதோறும் பர்மிஷன் வாங்கிட்டு வந்து என் படிப்புக்கு நிறைய ஹெல்ப் பண்ணுவாங்க. அப்புறம், எனக்கு ஐஏஎஸ் போஸ்டிங் கிடைச்சது" என்கிறார் ஸ்வரூப். 

"என் ஐபிஎஸ் வெற்றியைவிட, இவருக்காக எடுத்த சிரத்தையும், அதில் கிடைச்ச வெற்றியையும் நினைச்சு சந்தோஷப்பட்டது அதிகம். 2011-ம் வருடம், உத்தரகாண்ட் மாநிலம் மசூரியில் ஐஏஎஸ் டிரெயினிங்கில் இருந்தபடியே, இருவீட்டு பெற்றோர்கிட்டேயும் எங்க காதலைச் சொல்லி சம்மதம் வாங்கிட்டார். மதுரையில் கல்யாணம் நடந்துச்சு. சிவில் சர்வீஸ் துறையில் எந்த மாநிலத்திலும் போஸ்டிங் கிடைக்கும். அதனால் பிரிவுச் சூழலை நினைச்சு ஃபீல் பண்ணலை. மாசத்துக்கு ஒருமுறை சந்திச்சுக்குவோம். தினமும் போனில் பேசிப்போம். ஏதோ ஈர்ப்பு என இல்லாமல் திட்டமிட்ட இலக்கிலும் பயணித்து, பலருக்கும் முன்மாதிரியா இருக்கிற சந்தோஷம் எங்க வாழ்க்கைக்கு அர்த்தம் கூட்டுது. ஒவ்வொரு நாளையும் அன்போடும் மகிழ்ச்சியோடும் கழிக்கிறோம். நாங்க காதலை வெளிப்படுத்திகிட்ட ஜூன் 22-ம் தேதிதான், எங்களுக்கு வாலன்டைன்ஸ் டே" என்கிறார் ரம்யா, காக்கி மிடுக்கில் மிளிரும் காதலுடன். 

ஐபிஎஸ் தம்பதி: 
சதீஷ் பினோ (பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், கேரளா) - அஜிதா பேகம் (கொல்லம் மாநகர போலீஸ் கமிஷனர், கேரளா) 

காதல் தம்பதி

"என் பூர்வீகம் கோயம்புத்தூர். பி.காம்., முடிச்சதும் சிவில் சர்வீஸ் ஆசை வர, வீட்டில் மறுத்துட்டாங்க. சாப்பிடாமல், பேசாமல் என அமைதி வழிப் போராட்டங்களால் அனுமதி வாங்கினேன். 2008-ம் வருடம், ரெண்டாவது முயற்சியில் வெற்றியுடன் ஐபிஎஸ் போஸ்டிங் கிடைச்சது. தமிழகத்தில் எங்க இஸ்லாமியர் சமூகத்திலேயே முதல் பெண் ஐபிஎஸ் ஆபீஸர் நான். நிறைய பாராட்டுகள் குவிய, குடும்பத்தில் எல்லோரும் செம ஹேப்பி. இவருக்குப் பூர்வீகம், கன்னியாகுமரி. இவர் குடும்பத்தில் பலரும் அரசுப் பணியில் இருப்பதால், இவருக்கும் சிவில் சர்வீஸ் ஆசை. ரெண்டாவது முயற்சியில் ஐபிஎஸ் போஸ்டிங் வாங்கினார். ஹைதராபாத்தில் நடந்த போலீஸ் டிரெயினிங்ல முதல்முறையா அறிமுகமானோம். நண்பர்களாக வேலை, சமூக விஷயங்கள் எனப் பேச ஆரம்பிச்சு, ஒரே அலைவரிசையால் காதலில் சேர்ந்தோம். டிரெயினிங் முடிஞ்சு அவருக்கு மத்தியப்பிரதேசத்திலும், எனக்கு காஷ்மீரிலும் கேடர் பணி கிடைச்சது. ஒன்றரை வருஷம் போனில் மட்டுமே காதல் வளர்ந்துச்சு. ரெண்டு பேர் வீடுகளிலும் வரன் பார்க்க ஆரம்பிக்க, எங்க காதலைச் சொன்னோம். கொஞ்சம் எதிர்ப்பு, பிறகு சம்மதத்துடன் 2011-ம் வருடம் திருமணம் நடந்துச்சு" என்கிறார் அஜிதா மகிழ்ச்சியான குரலில். 

"2012-ம் வருடம் இருவரும் கேரளாவுக்குப் பணி மாறுதலானோம். கடந்த ஆறு வருஷத்தில் எனக்கு ஒன்பது போஸ்டிங். அவருக்கு அஞ்சு போஸ்டிங். ரெண்டாவது குழந்தையின் மகப்பேறு லீவில் இருந்த அஜிதா, கடந்த ஜூன் மாசம் மறுபடியும் பணியில் சேர்ந்த தருணம்தான், ஸ்பெஷல் நிகழ்வாச்சு. கொல்லம் மாநகர போலீஸ் கமிஷனர் பணியிலிருந்து, பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டேன். என் முந்தைய போஸ்டிங்ல அஜிதா நியமிக்கப்பட்டாங்க. இதை நாங்க ஒரு பர்சனல் சந்தோஷமாக நினைச்சோம். ஆனால், அஜிதாவுக்கு நான் கைகொடுத்து பொறுப்பைக் கைமாற்றின புகைப்படமும் செய்தியும் வைரலாச்சு. அப்போதான் இந்த ‘போலீஸ் தம்பதி பொறுப்பு மாற்றம்’ அரிதான நிகழ்வு என்பதும், கேரளாவில் முதன்முறையா நடப்பதும் தெரியவந்துச்சு. கல்யாணம் முதல் இப்போவரை, அடிக்கடி பிரிவுதான் எங்கள் வாழ்க்கையே. ஆனால், எங்கள் பணியை மனநிறைவுடன் செய்துட்டிருக்கோம்" என்கிறார் சதீஷ் பினோ மகிழ்ச்சியுடன்.