செவிலியர் மணிமாலா தற்கொலை விவகாரத்தில் 2 டாக்டர்கள் பணியிட மாற்றம்!

டாக்டர்கள் தமயந்தி- சக்தி அகிலாண்டேஸ்வரி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் பகுதி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மணிமாலாவின் தற்கொலை தொடர்பாகத் தலைமை மருத்துவர் மற்றும் உதவி மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமை மருத்துவர்களின் துன்புறுத்துதலால் தற்கொலை செய்துகொண்ட திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் பகுதி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மணிமாலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, கடந்த 3 நாள்களாக காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றுவந்த நீதி கேட்கும் போராட்டம் இன்று அதிகாலையில் வாபஸ் பெறப்பட்டது. மணிமாலாவின் குடும்பத்தினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுடன் அரசு நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

செவிலியர் மணிமாலா

மேலும், மணிமாலாவின் மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படும் வெள்ளக்கோயில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் தமயந்தியும், உதவி மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரியும் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனடிப்படையில், தலைமை மருத்துவர் தமயந்தி, ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதிக்கும், உதவி மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி, திண்டுக்கல் மாவட்டம் செந்துறை பகுதிக்கும் பணியிட மாற்றம் செய்திருக்கிறது தமிழக சுகாதாரத் துறை.

இதனிடையே, செவிலியர் மணிமாலாவின் சகோதரர் பரிமேலழகனுக்கு அரசு வேலையும், மரணம் தொடர்பான துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு அவரது குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியும் வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!