வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (14/02/2018)

கடைசி தொடர்பு:13:28 (14/02/2018)

'ரவுடியிஸம் விட்டு லாரி வேலைக்குச் சென்றேன்!' - ரவுடிகள் பினு, ராதாகிருஷ்ணனின் ஃபிளாஷ்பேக் #VikatanExclusive

போலீஸாரிடம் சரண் அடைந்த ரவுடி பினு

சென்னை போலீஸிடம் சரண் அடைந்த பினுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ரவுடித் தொழிலை விட்டுத் திருந்தி வாழ்ந்த சமயத்தில், லாரிக்கு கூண்டு கட்டும் வேலைக்குச் சென்றேன்' என பினு போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

 சென்னையை அடுத்த மாங்காடு, மலையம்பாக்கம் கிராமத்தில், தன்னுடைய 50-வது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் ரவுடி பினு கொண்டாடினார். இந்த ரகசியத் தகவல் சென்னை மாநகர போலீஸாருக்குக் கிடைத்ததும், அதிரடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 72 ரவுடிகளைக் கைதுசெய்தனர். ஒரே நாளில் 72 ரவுடிகளைக் கைதுசெய்து சென்னை போலீஸார் சாதனை படைத்தாலும், பிரபல ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகள் கனகு என்ற கனகராஜ், விக்கி உள்ளிட்ட சிலர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் என்கவுன்டர் பயத்தால், நேற்று அம்பத்தூர் துணை கமிஷனரிடம் சரண் அடைந்தார், ரவுடி பினு. இதையடுத்து, தனிப்படை போலீஸார் ரவுடி பினுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் ஒரு பகுதியை போலீஸார் வெளியிட்டனர். அதில் அவர், மனம்திறந்து பேசியுள்ளார். விசாரணை முடிந்து அவரை போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர். 

 இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரவுடி பினு மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன. சில வழக்குகளில் தலைமறைவாக இருந்த அவரை, சென்னை போலீஸார் தேடிவந்தனர். சென்னையைக் காலி செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்துவந்தார். இந்தச் சமயத்தில்தான் பினுவின் 50-வது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாட அவரது வலதுகரமான கனகராஜ் திட்டமிட்டார். அதுதொடர்பாக பினுவிடம் கனகராஜ் போனில் பேசியபோது, முதலில் தயக்கம்காட்டிய அவர், பிறகு சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மலையம்பாக்கம் கிராமத்தில் லாரி ஷெட் வைத்திருக்கும் வேலுவை கனகராஜ் சந்தித்து பேசியுள்ளார். அவரும் இடத்தை கொடுக்க சம்மதம் தெரிவித்த பிறகு, பிறந்தநாளுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் செய்தனர்.

ரவுடி பினு, பிறந்தநாள் கொண்டாடிய இடம்

பினு, பிறந்தநாளைக் கொண்டாட சென்னைக்கு வந்தார். அவரைப் பார்த்த உற்சாகத்தில், அவரது கூட்டாளிகள் 'தலைவா'  என்று கோஷமிட்டனர். அடுத்து, அரிவாளால் பினு, கேக்கை வெட்டியதும், அதைத் தங்களுடைய செல்போனில் படமாகவும் வீடியோவாகவும் எடுத்து மகிழ்ந்தனர். அதன்பிறகு, அனைவரும் மதுவிருந்தில் தங்களை மறந்து மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர். பினுவின் பிறந்தநாள் குறித்த தகவல் கிடைத்ததும், அதிரடியாக அங்கு சென்று ஒட்டுமொத்த ரவுடிகளையும் பிடிக்க முயன்றோம். ஆனால், எங்களிடமிருந்து பினு, கனகு, விக்கி, லாரிஷெட் உரிமையாளர் வேலு ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய பினுவை  சுட்டுப் பிடிக்கவும் முடிவு செய்திருந்தோம். எங்களின் தேடுதல் வேட்டையால் நிலைகுலைந்த பினு, சரணடைந்துவிட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, எங்களின் அனைத்து கேள்விகளுக்கும் அசராமல் பினு பதிலளித்தார். பவ்யமாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவர் அளித்த பதிலை வாக்குமூலமாகப் பதிவுசெய்துள்ளோம்' என்றார். 

 போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 'பிறந்தநாள் கொண்டாடிய பினுவை நாங்கள் சுற்றி வளைத்தவுடன், அங்கிருந்து தப்பி ஓடி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் பதுங்கியுள்ளார். அதன்பிறகு, அவ்வழியாகச் சென்ற லாரியை மடக்கி, திருவள்ளூருக்குச் சென்றுள்ளார். திருவள்ளூரில் பதுங்கியிருந்தபோதே கனகராஜ், காரையும் டிரைவரையும் அங்கு அனுப்பிவைத்திருக்கிறார். அதன்பிறகு, காரிலேயே தமிழகம் முழுவதும் சுற்றியிருக்கிறார். இரவில் வாகனச்சோதனை நடக்கும் என்பதால், காரை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துள்ளார். கரூரில் யாருக்கும் தெரியாமல் பதுங்கியிருந்த பினு, கனகராஜ் ஏற்பாட்டின்பேரில் அங்கு சிலருடன் தங்கியிருந்துள்ளார். எப்போதாவது, லாரிக்கு கூண்டு கட்டும் வேலைக்குச் சென்றுள்ளார். மற்ற நேரங்களில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார். சென்னையில் பினு இல்லாததால், அவருடைய எதிரி டீம் தலைதூக்கிவிட்டது. இதனால், பினுவின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால், பினுவை மீண்டும் சென்னைக்கு வரும்படி கனகராஜ் பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. 'திருந்தி வாழ்கிறேன்' என்று பதிலை மட்டும் சொல்லியிருக்கிறார்.

ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

 
 பினுவின் 50-வது பிறந்தநாளில் அவரை எப்படியாவது சென்னைக்கு அழைத்துவந்துவிட வேண்டும் என்று கனகராஜ் முடிவு செய்துள்ளார். அதன்படி, பினுவை சென்னைக்கு அழைத்துவந்து அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாட வைத்துள்ளார். சென்னைக்கு பினு வரும் தகவலை வாட்ஸ்அப் மூலம் கூட்டாளிகளுக்குத் தெரியப்படுத்திய கனகராஜ், அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பினுவைப் பார்த்த அவரது கூட்டாளிகள் மகிழ்ச்சியடைந்ததோடு, எதிரிகத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர். ஆனால், போலீஸார் நுழைந்ததால் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். பினுவின் செல்போன்மூலம் அவரது இருப்பிடத்தைக் கண்டறிய நாங்கள் முயன்றோம். ஆனால் பினு, செல்போனைப் பயன்படுத்தாமல் ஒரு ரூபாய் காயின் பூத் மூலமே தன்னுடைய கூட்டாளிகளைத் தொடர்புகொண்டுள்ளார்.

ஒருகட்டத்தில் பினு, கரூரில் தங்கியிருந்த தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், சென்னையிலிருந்து இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையிலான டீம், துப்பாக்கியுடன் அங்கு சென்றது. ஆனால், நாங்கள் வரும் தகவல் தெரிந்ததும் பினு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் தங்கியிருந்த இடத்தில் விசாரித்துவிட்டு அந்த டீம் சென்னைக்குத் திரும்பியது.  தன்னுடைய இருப்பிடத்தை நாங்கள் நெருங்கிவிட்டதும் பினுவுக்கு உதறல் ஏற்படத்தொடங்கியது. அதோடு, உயிர் பயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள போலீஸ் உயரதிகாரி ஒருவரை பினு தரப்பு தொடர்புகொண்டு பேசியுள்ளது. அதன்படி துணை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை பினு சரண் அடைந்துவிட்டார். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மட்டும் பினு சரணடைய சம்மதிக்கவில்லை என்றால், பினுவைக் கைது செய்திருப்போம்' என்றனர். 

 சூளைமேட்டில் பிறந்து வளர்ந்து, ரவுடியாக உருவெடுத்த பினுவுக்கு ஆரம்ப காலத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி ராதாகிருஷ்ணன்தான் வலதுகரமாக இருந்தார். ராதாகிருஷ்ணனும் பினுவும் நெருங்கிய நண்பர்கள். ரவுடிகளான பினுவின் நண்பருக்கும் ராதாகிருஷ்ணனின் நண்பருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. இதில் பினு தரப்பு, ராதாகிருஷ்ணனின் நண்பனின் தம்பியின் கதையை முடிக்க, இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. இது, இருவரையும் நிரந்தர எதிரியாக்கிவிட்டதாக பினுவுக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றனர். இதையடுத்து, ராதாகிருஷ்ணன் இருந்த இடத்துக்கு வந்த கனகராஜ், பினுவின் நம்பிக்கைக்குரியவராகவே இருந்துவந்துள்ளார். அவர்தான், பினுவுக்கு பணம் சப்ளை செய்துள்ளார். கனகராஜ் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், போலீஸாரின் அடுத்த டார்க்கெட் கனகராஜ் என்கின்றனர் போலீஸார். இதற்கிடையில், பிறந்தநாள் கொண்டாட இடம் கொடுத்த லாரி ஷெட் உரிமையாளர் வேலு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். 


டிரெண்டிங் @ விகடன்