வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (14/02/2018)

கடைசி தொடர்பு:13:40 (14/02/2018)

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்ட சமூக விழிப்பு உணர்வு குறும்படங்கள்!

உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் அரசு பள்ளி

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 'முதலிடம் நோக்கி'.. 'நீர்த்துளி உயிர்த்துளி' ஆகிய இரண்டு குறும்படங்கள் போட்டுக் காண்பிக்கப்பட்டன. மக்கள் பாதை  திண்ணை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசுப்பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, மாணவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் இந்தப் பணியைச் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகில் உள்ள உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 'மக்கள் பாதை' அமைப்பின் சார்பில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புஉணர்வு பயிற்சி இன்று நடைபெற்றது. தவிர, இரண்டு குறும்படங்களும்  மாணவர்களுக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டன. நீரின் அவசியத்தைக் குறித்தும்  குப்பைகள் இல்லாத தூய்மை இந்தியா குறித்தும் வலியுறுத்திய அந்தக் குறும்படங்களை மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வமுடனும் உன்னிப்புடனும் கவனித்துப் பார்த்தார்கள். அந்தச் சிறு குழந்தைகள் குறும்படத்தில் சொல்லப்பட்ட செய்தியை எப்படி உள்வாங்கிக் கொண்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சும்மா சொல்லக் கூடாது, அந்தச் சின்னஞ்சிறு மாணவிகள், படம் என்ன கருத்தை முன் வைக்கிறது என்பதை அழகாக விவரித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து , புதுக்கோட்டை மாவட்ட  திண்ணை அமைப்பின் பொறுப்பாளர் சங்கவி தர்மா மாணவர்களுடன்சங்கவி தர்மா பேசினார். "மனிதர்களில் எப்படி நல்லவர்கள், கெட்டவர்கள்னு இருக்காங்களோ.. அதே மாதிரி, குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு இரண்டு வகை இருக்கு. இதில், மக்கும் குப்பை நிலத்துக்கும் நமக்கும் நல்லது செய்யுது. மக்காத குப்பை பூமிக்குக் கெடுதல் செய்யுது.  நம்ம வீடுகளில் சேரும் குப்பைகளை ஒரே குப்பைத் தொட்டியில்தான் போடுவது வழக்கம். இனிமே அப்படி பண்ணக் கூடாது. இரண்டு குப்பைகளையும் தனித்தனித் தொட்டிகளில் போட வேண்டும். இப்படி தரம் பிரிப்பதால் குப்பைகளை மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியும்.மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க முடியும். மாணவர்களாகிய நீங்கள் உங்களது கிராமத்தை முழு சுகாதார கிராமமாக மாற்ற  உறுதிமொழி எடுத்து, அதனைச் செயல்படுத்தவும் வேண்டும். செய்வீர்களா?" என்று சங்கவி தர்மா பள்ளி மாணவர்களைப் பார்த்துக் கேட்க, அந்த பள்ளிக்கட்டடமே அதிரும்படியாக, "செய்வோம் அக்கா"என்று ஒருமித்தக்குரலில் கூறினார்கள்.

அவரிடம் பேசினோம்.  "ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் வழிகாட்டுதலின்படி செயல்படும் மக்கள் பாதை அமைப்பின் நோக்கமே இப்படிப்பட்ட கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களைத் தேடிச்சென்று, சமூகம் சார்ந்த  விழிப்புஉணர்வை  ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அத்துடன் இந்த  மாணவர்களிடம் உள்ள தனித்திறமையைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி, அடுத்த கட்டத்தை நோக்கி அவர்களைப் பயணிக்க வைக்க வேண்டும் என்பதுதான். அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்" என்றார்.

முடிவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் குப்பைகளை தரம் பிரிப்பது, நீர் சேமிப்பு தொடர்பான உறுதிமொழியை மாணவ , மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர்.