நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து 12 சிறுவர்கள் எஸ்கேப்!

நெல்லையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளரைத் தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் தப்பிச்சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 4 சிறுவர்கள் பிடிபட்ட நிலையில் மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

கூர்நோக்கு இல்ல சிறுவர்கள்

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளம் குற்றவாளிகள் இந்த இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இல்லத்தில் மொத்தம் 32 இளம் குற்றவாளிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அருணாசலம் என்பவர் இந்த இல்லத்தின் கண்காணிப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

இந்த இல்லத்தில் இருந்த சிறுவர்கள் சிலர், உருட்டுக்கட்டையால் கண்காணிப்பாளர் அருணாசலத்தைத் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த சாவியைப் பிடுங்கினார்கள். பின்னர் கதவைத் திறந்து 12 சிறுவர்கள் தப்பிச் சென்றனர். இது பற்றி அருணாசலம் அளித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு நேரில் வந்த நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையரான கபில்குமார் சரட்கர் விசாரணை நடத்தினார். 

தப்பிச்சென்ற சிறுவர்கள் சொந்த ஊருக்குச் சென்றிருப்பார்கள் என்பதால் அங்கு சென்று விசாரணை நடக்கிறது.  தப்பியோடிய கோவில்பட்டி சூரியா, திருச்செந்தூர் சத்திய முகேஷ், தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார், செல்வம், அழகுராமர், இசக்கிராஜா, சாத்தான்குளத்தைச் சேர்ந்த கிருஷ்டோபர், சிவகங்கை சூர்யா, தட்டப்பாறை மாரிக்கண்ணன், திருப்பத்தூர் பாலாஜி, நெல்லை பால்துரை, மானூர் லட்சுமணன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தாக்கப்பட்ட வார்டன்

இந்த நிலையில், தப்பிச்சென்ற சூரியா என்ற சிறுவனை கோவில்பட்டியில் போலீஸார் பிடிக்க முயற்சி செய்தபோது கையை வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன், தட்டப்பறை மாரியப்பன், திருப்பத்தூர் பாலாஜி, மேலப்பாளையம் பால்துரை ஆகியோரும் பிடிபட்டு உள்ளனர்.இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில் தலைமறைவாக இருக்கும் மேலும் 8 சிறுவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!