வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (14/02/2018)

கடைசி தொடர்பு:17:09 (14/02/2018)

``ரூ.10 கோடி பரிசு தருகிறேன்'' - ரஜினி, கமலுக்கு சவால்விடும் `கள்' நல்லசாமி`

"தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வரத் துடிக்கின்றனர், அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கள்ளை ஒரு போதை தரும் பானம் என்று நிரூபித்தால் அவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசாகத் தருகிறேன்"என்று தமிழக 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவதற்காகத் தமிழக 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இன்று புதுக்கோட்டை நகருக்கு வந்திருந்தார். அவர் தங்கியிருந்த ரோஜா இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் ஆங்காங்கே நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன, அங்கு விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 25 ரூபாய் லஞ்சம் பெறுகின்றனர். அரசு சார்ந்த அனைத்து இடங்களிலும் லஞ்சம்  வாங்குவதைப்போல் நெல் கொள்முதலுக்கும் லஞ்சம் வாங்குகின்றனர். இது விவசாயிகளின் ரத்தத்தை உழைப்பைச் சுரண்டுவதற்குச் சமம். இலவசம், மானியம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் இந்த அரசு  நெல் கொள்முதல் மையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை ஏன் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசு ஊழல் இல்லாத நிர்வாகம் செய்ய வேண்டும். இன்றைய தமிழக அரசுக்கு ஆளுமையைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது. இதற்கு முந்தைய அரசிலும் லஞ்சம் என்பது இருந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கலைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வர துடிக்கின்றனர்.

அப்படி அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தகுதியுடைவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும். தகுதி இல்லாதவர்கள் தயவுசெய்து அரசியலுக்கு வர வேண்டாம். வந்து நாட்டைக் கெடுக்க வேண்டாம். அரசியலுக்கு வர நினைக்கும் கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வரும் முன்பு 'கள்' இயக்கத்திடம் வாதிட வாருங்கள். 'கள்' ஒரு தடைசெய்யபட்ட போதைப்பொருள் என்பதை நிரூபித்துவிட்டால், உங்களுக்கு அரசியலுக்கு வரக்கூடிய தகுதி இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுகின்ற கட்சியாக இருந்தாலும் சரி 'கள்' இயக்கத்திடம் வாதிட்டு 'கள்' ஒரு போதைப்பொருள் என்று நிரூபித்துவிட்டால் 10 கோடி பரிசு கொடுத்து 'கள்' இயக்கத்தைக் களைத்துவிடுகிறோம். உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் கள்ளுக்குத் தடையில்லாதபோது, தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடைவிதித்துள்ளனர். இது உலகளாவிய நடைமுறைக்கு எதிரானது. கள்ளுக்குத்  தடைவிதித்த ஆண்ட கட்சியினரும் ஆளுகின்ற கட்சியினரும் அறிவில்லாதவர்கள். நீரா இறக்குவதற்கு அரசு அனுமதி கொடுக்கத் தேவையில்லை. அதை இறக்க தமிழக அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது. நிபந்தனையின்றி நீரா இறக்க அரசு அனுமதி கொடுக்க வேண்டும், டாஸ்மாக் விற்பனை குறையக் கூடாது என்பதற்காகவே நீரா பானம் இறக்க பல நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது, நீராவுக்கு உள்ள நிபந்தனைகளைத் தளர்த்திவிட்டு நீராவில் களப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தால் வரவேற்போம். அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் 'கள்' இறக்க தடைவிதித்துள்ளனர். 'கள்' குறித்த  விழிப்பு உணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்குத் திரண்டதுபோல், கள்ளுக்குள்ள தடையை நீக்கக் கோரி, ஒட்டு மொத்த தமிழக மக்களும் விரைவில் கிளர்ந்து எழுவார்கள்" என்று எச்சரித்தார்.