வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (14/02/2018)

கடைசி தொடர்பு:18:00 (14/02/2018)

''தளபதி ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் ஓயமாட்டேன்!'' - கிடுகிடு வைகோ

''தி.மு.க-வை ஆதரிப்பதைத் தவிர,  இப்போது வேறு வழியில்லை. தளபதி ஸ்டாலினை முதல்வராக்க உணர்வுபூர்வமாக முடிவெடுத்துவிட்டேன். கலைஞருக்கு முப்பது வருடங்கள் கவசமாக இருந்த நான், இனி ஸ்டாலினுக்குக் கவசமாக இருப்பேன். ஸ்டாலின் விரைவில் முதல்வராவார்'' என்று வைகோ உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதைப் பார்த்து தி.மு.க-வினரே அரண்டுவிட்டார்கள். 

தளபதி ஸ்டாலினை

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கண்டனக் கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மதுரை கண்டனக் கூட்டத்தில், கண்டனப் பேருரை ஆற்ற வைகோ வந்திருந்தார். அவர் பேசும்போது,  ''14 ஆண்டுகளுக்குப் பின் மதுரையில் தி.மு.க கொடி கட்டிய மேடையில் பேசுகிறேன். திராவிடக் கழகங்கள் இல்லாத தமிழகம் என்று சிலர் பேசுகிறார்கள். புதுசுபுதுசாகச் சிலர் வருகிறார்கள். இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. திராவிட வழியில் வந்த நான், தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்தாமல் விடமாட்டேன். தளபதி ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் ஓயப்போவதில்லை. 

எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டு நான் இங்கு வரவில்லை. மத்திய அமைச்சர் பதவியை வேண்டாமென்று கூறிவன் நான். தி.மு.க-வில் முப்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். இடையில் 14 வருடம் சில பிரச்னைகள். அது, சகோதரர்களுக்குள், தகப்பன் - மகனுக்குள் இருந்த  வேறுபாடுதான்.

என்னை ராசியற்றவன் என்று கூறுகிறவர்களுக்கு ஒன்றே ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். தமிழகத்தில் சங்கரன்கோவிலில் தி.மு.க-வை வெற்றிபெற வைத்தவன் நான். அதற்காக என்னை ராஜ்யசபாவுக்கு கலைஞர் அப்போது அனுப்பிவைத்தார். மயிலாடுதுறை இடைத்தேர்தலில் நானும் கோசி.மணியனும் இணைந்து வெற்றியைத் தேடித்தந்தோம். அதற்குப்பின் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பதவியைக் கொடுத்தார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், எந்தப் பதவியையும் தேடி இக்கூட்டணிக்கு வரவில்லை. தளபதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டுமென்பதுதான்.

வைகோ

திராவிட இயக்கத்துக்கு ஓர் ஆபத்து என்றால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். வெற்றி ஒன்றேதான் குறிக்கோள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். அவருடன் கூட்டணி வைத்தவன் நான். ஆனால், வெற்றிபெற்ற 48 மணி நேரத்தில் மோடியை எதிர்த்தேன். ராஜபக்‌ஷேவை அழைத்து வந்தபோது நாங்கள் எதிர்த்தோம். மோடி பதவியேற்றபோது அதற்கு எதிராக முதல் போராட்டம் நடத்தியது வைகோதான்.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற பி.ஜே.பி-யின் கொள்கையை விடமாட்டேன். அப்படியிருந்தால், இந்திய ஒருமைப்பாடே சிதைந்துவிடும். இதைச் சொல்வதால் என்மீது வழக்குப் போட்டால் அஞ்சமாட்டேன். தேசத் துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட வழக்கையே சந்தித்தவன் நான். தற்போது இந்தியை வளர்க்கப் பல கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்கள்.

சிறந்த கல்வியாளர்  லட்சுமணசாமி முதலியாரிடம் பட்டங்களை வாங்கியவன் நான். இங்கு அமர்ந்திருக்கும் பி.டி.ஆர். மகன் வெளிநாட்டில் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கியவர். இன்று பட்டங்களின் நிலையைப் பாருங்கள். கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இப்போது சில உண்மைகள் வெளிவருகிறது. பத்துக் கோடி ரூபாய் கொடுத்து வி.சி பதவி வாங்கியுள்ளார்கள். அவர்கள் ஆசிரியர் நியமனங்களில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்வார்கள். இதில் கல்வி அமைச்சருக்குத் தொடர்புள்ளது.

 

தளபதி ஸ்டாலினை

காவிரியின் நிலைமையால் வைகை ஆற்றுக்கும் முல்லை பெரியாற்று பாசனப் பகுதிக்கும் ஆபத்து வரப்போகிறது. காவிரி வேளாண்மைப் பாதுகாப்பு மண்டலம் வேண்டும் என்று கேட்டோம். மோடி அரசோ அதைப் பெட்ரோலிய ஆய்வு மண்டலமாக அறிவித்துள்ளார்கள். நியூட்ரினோ திட்டத்தால் பெரும் ஆபத்து உள்ளது. இதை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து... தற்போது அதை நிறுத்தி வைத்துள்ளேன்.

 

நாடாளுமன்றத்தில் பல பிரதமர்களின் பேச்சைக் கேட்டுள்ளேன். ஆனால், மோடி பேசியது போன்று மோசமான பேச்சைக் கேட்டதில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியை அறிஞர் அண்ணா எவ்வளவோ விமர்சித்தபோதும்.... வெளிநாட்டில் அந்தக் கட்சியின் தலைவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசியவர். அந்தப் பண்பாட்டில் வந்தவர்கள் நாங்கள். இப்போது பட்டேல் பிரதமராக வந்திருக்க வேண்டியவர் என்று மோடி சொல்கிறார். பட்டேல் அவ்வளவு சிறந்த தலைவரா...? அவரை மதிக்கிறேன். ஆனால், நேருவோடு ஒப்பிட முடியாது. நேதாஜிக்குத் துரோகம் செயதவர்தானே படேல்.

கலைஞரை, சமீபத்தில் இரண்டுமுறை சந்தித்தேன். 'வைகோ நமது கூட்டணிக்கு வந்துவிட்டார்' என்று ஸ்டாலின் கலைஞரின் காதில் சொன்னார். கண்ணைத் திறந்து பார்த்தார்.  நான், 'அவர் காதில் உங்களுக்குக் கவசமாக இருந்ததுபோல தளபதி ஸ்டாலினுக்கும் கவசமாக இருப்பேன்' என்று கூறினேன். தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்துவதே என் பணியாக இருக்கும்" என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்