வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (14/02/2018)

கடைசி தொடர்பு:17:38 (14/02/2018)

மெரினாவுக்குப் பூட்டு, பலூன் உடைப்புப் போராட்டம்... காதலர் தினத்தை எதிர்த்துப் போராட டிப்ஸ்!

ஒரு பக்கம் காதலர் தினத்தைக் கொண்டாடினாலும், இன்னொரு பக்கம் காதலர் தின எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்துகிட்டுதான் இருக்கு. ஒவ்வொரு வருஷமும் இவங்க பண்ற போராட்டம் எல்லாமே வழக்கமான பாணியிலேயே இருக்கிறது, நமக்குக் கொஞ்சம் கடுப்பாத்தான் இருக்கு. அதனால் இந்த வருஷப் போராட்டத்தை வேற எப்படியெல்லாம் செய்யலாம், புதுசு புதுசா தினுசு தினுசா எதிர்ப்பைத் தெரிவிக்க என்னென்ன வழிகள் இருக்குனு யோசிச்சுக்கிட்டிருக்காங்கலாம்... அதுல இருந்து நமக்குக் கிடைத்த சில தகவல்கள் உங்களுக்கும்...

காதலர் தினம்

யானைக்கும் பூனைக்கும் கல்யாணம்!

கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம், நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம், நாய்க்கும் ஆட்டுக்கும் கல்யாணம் நடத்துவது ரொம்ப ரொம்பப் பழைய போராட்டமாகிவிட்டது. எனவே, மிகவும் புதுமையாக யானைக்கும் பூனைக்கும் கல்யாணம் நடத்திவைக்கலாம். இதன்மூலம் உலகத் தொலைக்காட்சிகளின் கவனத்தை ஈர்க்கலாம். ஆனா, யானையின் கழுத்தில் மாலை அணிவிக்கும் பூனை, கொஞ்சம் சூதானமாக நடந்துக்கணும். ``என்னங்கடா, இந்தப் பொடிப்பயலோடு கட்டாயக் கல்யாணமா பண்ணிவைக்கிறீங்க!''னு கடுப்புல யானை மிதிச்சாலும் மிதிச்சிடும்!

மெரினா பீச்சுக்குப் பூட்டு போடும் போராட்டம்!

சென்னையில லவ் பண்றவங்களோட சீப் அண்ட் பெஸ்ட் சொர்க்கபுரி, `மெரினா பீச்'! ஏற்கெனவே கத்திபாரா பாலத்துக்குப் பூட்டுபோட்டு போராட்டத்தை பரபரப்பா நடத்தினாங்க. இப்போ அதைவிட பரபரப்பா மெரினா பீச்சுக்கே பூட்டு போட்டு, `உலகத்திலேயே மிக நீளமான பூட்டு போடும் போராட்டம்'னு வரலாற்றில் இடம்பிடிக்கலாம்.
 
வாயில வயித்துல அடித்து அழும் போராட்டம்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற பல பேருக்கு, `காதலிக்கிறவங்க மட்டும் சந்தோஷமா இருக்காங்களே!'ங்கிற வயித்தெரிச்சல் இருக்கும். அந்த வயித்தெரிச்சலை வெளிப்படுத்துற மாதிரி, வாயில வயித்துல அடிச்சுக்கிட்டு அழுற போராட்டத்தை நடத்தியே ஆகணும்! அதுவும் ஜோடி ஜோடியா உட்கார்ந்திருக்கும் காதலர்களுக்கு முன்னாடி நின்னு வாயில வயித்துல அடிச்சால்தான் அந்த வயித்தெரிச்சல் அவங்களை நேரிடியா போய்ச் சேரும்!

காதலர் தினம்

பூங்கா இருக்கையில் சுவிங்கம் ஒட்டும் போராட்டம்!

எந்தப் பூங்காவுக்குப் போனாலும் அங்கு இருக்கும் இருக்கைகளில் காதலர்கள்தான் உட்கார்ந்திருக்காங்க. அவங்க உட்காராமல் இருக்க, எல்லா இருக்கைகள்லயும் சுவிங்கத்தை மென்னு ஒட்டி வெச்சுடணும். யார் உட்கார்ந்தாலும் எந்திரிக்கிறப்ப வால் மாதிரி சுவிங்கம் நீண்டுக்கிட்டே போகும்.

1008 இதய வடிவ பலூன்கள் உடைப்புப் போராட்டம்!

இதய வடிவம் உள்ள 1008 பலூன்களை ஊதி வரிசையா கட்டித் தொங்கவிட்டு, ஊசியால் குத்தி உடைக்கும் போராட்டத்தை நடத்தலாம்.

கூஜா கொடுக்கும் போராட்டம்!

காதல் என்றாலே ரோஜாதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். காதலைச் சொல்வதற்கு ரோஜாதான் கொடுப்பார்கள். இதனாலேயே காதலர் தினத்தையொட்டி உலகளவில் ரோஜா விற்பனை கொடிகட்டிப் பறக்கும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, ரோஜாவுக்குப் பதில் காதலர்களுக்கு கூஜா கொடுத்து, `சாமியார்களா போங்க!' எனக் கூறி போராட்டத்தை நடத்தலாம்.
 
லவ் எதிர்ப்பு மாரத்தான்!

இப்போது எந்த ஒரு விழிப்புஉணர்வுக்கும் மாரத்தான் நடத்துவதுதான் ட்ரெண்ட். எனவே, காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காதலர் தினம் அன்றே மாரத்தான் போட்டி நடத்தலாம். இதில், காதலை எதிர்க்கும் அரசியல்வாதிகள், அமைப்புகள், பெற்றோர்கள், காதலில் தோற்றுப்போனவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஓடலாம்.

 

காதலர் தினம்

லவ் ஆல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஸ்கோர் சொல்லும்போது `லவ் ஆல்' என்றுதான் தொடங்கும். எனவே, அத்தகைய விளையாட்டுகளில் லவ் ஆல் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு எதிராக, `விளையாட்டுக்காகக்கூட லவ் ஆல் சொல்லாதே!', `ஹேட் ஆல்! ஹேட் ஆல்! லவ் ஆல் சொல்லும் விளையாட்டுக்களை ஹேட் ஆல்!' என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

லவ் பேர்ட்ஸ் பிரிக்கும் போராட்டம்!

அதென்ன அந்தப் பறவைகளுக்கு மட்டும் லவ் பேர்ட்ஸ்னு பெயர்? இந்தப் பெயரை வெச்சுக்கிட்டு ஒரே கூண்டில் இருக்கலாமா? யாரெல்லாம் வீட்டில் லவ் பேர்ட்ஸ் வளர்க்கிறாங்களோ, அவங்க வீட்டுக்கெல்லாம் போய், லவ் பேர்ட்ஸ் கூண்டைத் திறந்து அம்புட்டையும் பறக்கவிடுங்க பாஸ். ஊர்ல இனிமே எவனும் லவ் பேர்ட்ஸ் வளர்க்கக் கூடாது.

நோ லவ் யாகம்!

மழை வேணும்னாலும் யாகம் வளர்க்குறோம், மழை வேணாம்னாலும் யாகம் வளர்க்கிறோம். பிறகென்ன, இந்த உலகத்துல லவ்வை ஒழிப்பதற்காக `நோ லவ்' யாகம் ஒண்ணு நடத்துறோம். உலகில் இருக்கும் டோட்டல் லவ்வையும் ஒழிக்கிறோம்.


டிரெண்டிங் @ விகடன்