வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/02/2018)

கடைசி தொடர்பு:18:00 (14/02/2018)

`இப்படி பண்ணிட்டீங்களே' - எம்.எல்.ஏ-வால் தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்

தனது இடத்தை, அ.தி.மு.க எம்.எல்.ஏ ராம ஜெயலிங்கம் அபகரித்துவிட்டதாகக் கூறி அவரின் வீடு முன்பு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வேலாயுதம் நகரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை. அவர் மனைவி மல்லிகாவின் பெயரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இடம் வாங்கி வீடுகட்டி குடியிருந்து வந்தார்.  தற்போது அவரின் மகன்கள் புதிதாகக் கட்டியுள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் அவரது பழைய வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.

இதனிடையே, அண்ணாமலையின் பழைய வீட்டுக்கு எதிரே வசித்து வந்த தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் தனக்கு சொந்தமான வீட்டையும் மனையையும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன் என்பவரிடம் இடத்துக்கு இடம் பரிவர்த்தனை செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை, முன்னாள் வி.ஏ.ஓ சண்முகம், அரசு நடத்துநர் ஜெயராமன் உட்பட 5 குடும்பங்கள் அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். மேற்படி வீடுகளுக்கு செல்லும் பாதையை 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பனிடம் தனது வீட்டை பரிவர்த்தனை செய்து கொடுத்ததால் சின்னப்பன், ஐந்து குடும்பங்கள் செல்லும் பாதையை மறித்து கம்பி வேலி போட முயற்சி செய்துள்ளார்.

                              சப் இன்ஸ்பெக்டர்

இதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மேற்படி இடப்பிரச்னை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து எம்.எல்.ஏ ராம ஜெயலிங்கத்தின் வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்திக்கொள்ள முயன்றவரை அக்கம்பக்கம் நின்றவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

''எனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் என்னிடம் கொடுத்துவிட்டுப் போக வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும்'' என எச்சரித்திருக்கிறார் அண்ணாமலை. போலீஸாருக்கே இந்த நிலையா என்று புலம்புகிறார்கள் ஜெயங்கொண்டம் மக்கள்.