வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (14/02/2018)

கடைசி தொடர்பு:19:19 (14/02/2018)

”கோயில்கள் விவகாரத்தில் எடப்பாடியின் முடிவு ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று இருக்கிறது!” - வெள்ளையன்

வெள்ளையன்

துரை மீனாட்சி அம்மன் கோயிலில், நிகழ்ந்த தீ விபத்தைத் தொடர்ந்து, 'கோயில் வளாகக் கடைகளை அகற்ற முதல்வர் உத்தரவு' இட்டுள்ளார். முதல்வரின் இந்த முடிவுக்கு வியாபாரிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பலை உருவாகிவருகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையனிடம் முதல்வரின் அறிவிப்பு பற்றியும், கோயில் தீ விபத்து குறித்தும் கருத்துக் கேட்டோம்....

''தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு, 'எடுத்தேன், கவிழ்த்தேன்' முடிவாக இருக்கிறது. ஒரு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்றால், அந்தப் பிரச்னை ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது என்பது குறித்தெல்லாம் ஆராய வேண்டும். 

கோயிலில், தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றால், அந்த விபத்து எப்படி ஏற்பட்டது? இனிமேல் அதுபோன்ற விபத்து ஏற்படாமலிருக்க என்ன செய்யலாம்... என்பது மாதிரி ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, 'தீ பிடித்துவிட்டதா? அப்படியென்றால், அந்தக் கடைகளை எல்லாம் அப்புறப்படுத்திவிடுங்கள்' என்று உத்தரவிட்டுவிட்டால், பிரச்னை சரியாகிவிடுமா?
ஒரு மாணவன், ஆசிரியரைக் குத்திவிட்டதாகச் செய்தி வருகிறது. உடனே, 'இனிமேல் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கவேண்டாம்' என்று உத்தரவிட்டுவிட முடியுமா? பெரும்பாலான தீ விபத்துகள், மின் கசிவினால்தான் ஏற்படுகின்றன. உடனே, 'மின்சார வாரியத்தை இழுத்து மூடிவிடலாமா?' இதுவா பிரச்னையைத் தீர்க்கும் வழி?

கோயில் தீ விபத்து

மீனாட்சி கோயிலில் நடந்த தீ விபத்து... எப்படி ஏற்பட்டது, யாருடைய கவனக் குறைவால் ஏற்பட்டது, இனிமேல் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமலிருக்க என்னென்ன முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும், எச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்ந்து முடிவெடுப்பதுதான் ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக இருக்கும்.

இப்போது, முதல்வர், உத்தரவுப்படி கடைகளை அப்புறப்படுத்திவிட்டால், அந்த வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கு மாற்று வழி என்ன? வேறு இடத்தில் கடைகள் வைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெறும் என்கிறார்கள். இது எந்தளவு சாத்தியம்? கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயில் வாசலிலேயே தேங்காய், பூ, பழம், பத்தி, விளக்கு, எண்ணெய்... என்று வாங்கிக்கொண்டு செல்வதுதான் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவரும் பழக்கம். நெடுந்தொலைவிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தப் பொருள்களை எல்லாம் வாங்கிக்கொண்டு கோயிலுக்கு வந்துபோவதில் பல்வேறு நடைமுறைப் பிரச்னைகள் இருக்கின்றன. 

அடுத்ததாக, கறுப்புக் கயிறு, விபூதி, குங்குமம், சாமி படம், குத்துவிளக்கு... போன்ற நம்பிக்கை சார்ந்த பொருள்களை கோயில் வாசலிலேயே வாங்குவதுதான் பக்தர்களுக்கு ராசியானதாகவும் இருக்கும். அதை விட்டுவிட்டு கோயிலில், சாமி கும்பிட்டுவிட்டு, வேறு எங்கோ இருக்கும் கடையில், இதுபோன்ற பொருள்களை வாங்கிக்கொள்வதென்பது பக்தர்களின் கடவுள் நம்பிக்கைக்கேப் பொருந்தாதே.... 'கோயில் வாசலில் வாங்கினோம்' என்று சொல்லித்தானே இன்றைக்கும் நமது பக்தர்கள் தாங்கள் வாங்கிவந்தப் பொருள்களை நட்பு வட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். ஆக, பக்தர்களைப் பொறுத்தவரை அந்தந்தக் கோயில் வாசலிலேயே பொருள்களை வாங்குவதுதான் விசேஷம், பெருமையும்கூட.

எடப்பாடி பழனிசாமி

அரசு என்பது, யானை பலம் கொண்டது; ஒரேயொரு உத்தரவினால் மிகப்பெரிய மாற்றத்தை அரசாங்கத்தால் ஏற்படுத்திவிட முடியும். ஆனால், அவ்வளவு சக்திவாய்ந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு முன் தீர ஆலோசித்து - ஆய்ந்து உத்தரவுகளை வழங்கவேண்டும். முதலாவதாக, கோயில் வளாகங்களில் கடை வைப்பதற்கு நம் முன்னோர்கள் ஏன் அனுமதி வழங்கினார்கள் என்பதை முதலில் ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கும்கூட பெரும்பாலான கோயில்களில் நடைபெறும் முக்கால பூஜைகளுக்கும், கடை வாடகையாக வசூலாகும் பணம்தான் பெரும் உதவியாக இருந்துவருகிறது. எனவே, நம் தமிழக முதல்வர், 'கோயில் வளாகக் கடைகளை அப்புறப்படுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!'' என்ற கோரிக்கையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி முடித்தார் வெள்ளையன்!
 


டிரெண்டிங் @ விகடன்