வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (14/02/2018)

கடைசி தொடர்பு:18:32 (14/02/2018)

“விவசாயிகள் மாதிரி நாங்க தற்கொலைதான் பண்ணிக்கணும்!”- கதறும் டேங்கர் லாரி உரிமையாளர்கள்

 டேங்கர் லாரி

மண்டல வாரியான வாடகை டெண்டர் முறைக்குப் பதிலாக, மாநில அளவில் டெண்டர் நடைபெற்றால், தமிழகப் பதிவெண்கள் கொண்ட லாரிகள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். இதனால் '900 கோடி ரூபாய் கடன் வாங்கி வாங்கப்பட்ட புதிய டேங்கர் லாரிகளின் கடனை எப்படிக் கட்டுவது...' என எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் பதறிப்போய் காலவரையற்றப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் டேங்கர் லாரிகளுக்கு மண்டல வாரியாக டெண்டர் விட்டு வாடகைக்கான விலைப் புள்ளியை நிர்ணயம் செய்துவந்தன. இந்தநிலையில், ‘மண்டல வாரியான வாடகை டெண்டர் முறையை ரத்து செய்துவிட்டு, இனி ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே டெண்டர் அறிவிக்கப்படும்' என்றும் 'அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கடந்த 2017 டிசம்பரில் அறிவித்தது. 

 

‘மாநில அளவில், டெண்டர் நடைபெற்றால், தமிழகப் பதிவெண்கள் கொண்ட லாரிகள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். எனவே டேங்கர் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மாநில அளவிலான டெண்டர் முறையைத் திரும்பப் பெற வேண்டும்’ என, கடந்த டிசம்பர் மாதமே எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர். அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால், எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் 12 ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 

இதுகுறித்து தென்மண்டல பங்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொன்னம்பலம் அவர்களிடம் பேசுகையில், “மாநில அளவிலான டெண்டர் முறையைக் கைவிட வேண்டும் என எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால், தென் மண்டலத்தில் உள்ள சுமார் 8 ஆயிரம் டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எங்களுடையப் போராட்டத்துக்கு மற்ற மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்களும் ஆதரவு தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதுவரை தமிழ்நாடு பதிவெண் கொண்ட டேங்கர் லாரிகளை மற்ற மாநிலங்களுக்குப் பயன்படுத்தி வந்தோம். ஆனால், தற்போதைய அறிவிப்பால் அந்தந்த மாநிலப் பதிவெண்களைக் கொண்ட லாரிகளை மட்டுமே இயக்க முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த முறையை கைவிட அரசு முன்வர வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும்” என்று கூறினார்.

 

தென்மண்டல பங்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் என்.ஆர்.கார்த்திக், “மங்களூர் மற்றும் சென்னை எண்ணூர் லோடிங் பாய்ன்ட் அதிகளவில் பயன்பாட்டில் இருந்ததன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டேங்கர் லாரிகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகப் பதிவெண் கொண்டு ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று புதிதாக 3 ஆயிரம் டேங்கர் லாரிகள் தற்போது வாங்கப்பட்டிருக்கின்றன. அதுவும் தமிழக மற்றும் கர்நாடகப் பதிவெண்களில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கின்றன. மாநில வாரியான டெண்டர் மற்றும் அந்தந்த மாநில டேங்கர் லாரிகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசின் இந்த அறிவிப்பினால், ஏற்கெனவே இருக்கும் டேங்கர் லாரிகள் மட்டுமல்லாது 900 கோடி ரூபாயில் கடன் வாங்கி வாங்கப்பட்ட புதிய டேங்கர் லாரிகளின் கடனையும் எப்படி எங்களால் கட்ட முடியும்? மத்திய அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெறவில்லை என்றால் விவசாயிகள் மாதிரி நாங்களும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைதான் வரும். ஒரு வாரம் வரை மக்களுக்கு கேஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. அதற்குள் மத்திய அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

 


டிரெண்டிங் @ விகடன்