ராமேஸ்வரம் தீவில் நிலத்தடி நீரைப் பாதுகாக்க 8 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

 ராமேஸ்வரம் தீவில் நிலத்தடி நீரைப் பாதுக்காக்கக் கோரி 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.

ராமேஸ்வரம் மக்கள்

ராமேஸ்வரம் தீவுப் பகுதியாக இருந்தாலும் தீவுக்குள் உள்ள பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் நன்னீராக இருக்கிறது. இந்த இடங்களை வளைத்துக்கொண்ட தனியார்கள் சிலர் நிலத்தடி நீரைக் கட்டுப்பாடு இன்றி உறிஞ்சி விற்பனைப் பொருளாக மாற்றிவிட்டனர். இதனால் ராமேஸ்வரம் தீவில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமும் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இந்தத் தடையைச் செயலுக்குக் கொண்டு வர கோரியும், தீவின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் தேவையான குடிநீரை அரசே வழங்க வேண்டும் எனக் கோரியும் ராமேஸ்வரம் நகராட்சி மற்றும் தங்கச்சிமடம் ஊராட்சியைச் சேர்ந்த 8 கிராம மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகி ஜேம்ஸ் ஜஸ்டின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பேக்கரும்பு, அரியாண்குண்டு, குடியிருப்பு, தண்ணீர் ஊற்று, மெய்யம்புளி, செம்மமடம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்ட அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!