வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (14/02/2018)

கடைசி தொடர்பு:19:00 (14/02/2018)

70 அடி ஆழ ரயில்வே பாலத்தைக் கடக்கும் மக்கள்; 50 ஆண்டுகளாகத் தொடரும் அபாய பயணம்!

குன்னூர் அருகே ரண்ணிமேடு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு சுமார் 70 அடி ஆழமுடைய ரயில்வே பாலத்தைக் கடந்து சென்று வருகின்றனர்.

ரண்ணிமேடு ரயில்வே பாலம்

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த காட்டேரி பூங்காவுக்கு கீழ் பகுதியில் ரண்ணிமேடு ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் அவர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் தோட்ட வேலைகளைச் செய்து வருகிறார்கள். ரண்ணிமேட்டிலிருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல ரயில்வே ஸ்டேஷன் வழியைத்தான் பயன்படுத்த வேண்டும். 

ஊருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே சிறிய ஆறு இருக்கிறது. ஆனால், அங்கு மேம்பாலம் கிடையாது. இதனால் ஊரிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் பகுதிக்குச் செல்ல சுமார் 70 அடி ஆழ ரயில்வே பாலத்தின் மீது நடந்து செல்ல வேண்டியுள்ளது. நடைபாலம் இல்லாததால் தினமும் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எனினும் பகல் நேரத்தில் பாலத்தைக் கடந்து சென்றாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் யானைத் தொல்லைக்கு பயந்து மின் விளக்கு வசதியில்லாததால் இருட்டில் பாலத்தைக் கடந்து செல்ல வேன்டியுள்ளது. 

ரண்ணிமேடு ரயில்வே பாலம்

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் கண்ணகி என்பவர் கூறுகையில், “இப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்த ஊரில் உள்ள பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும், ஊட்டி அல்லது மேட்டுப்பாளையம் செல்ல ரயில்வே 
பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. மாலை நேரத்தில் யானை தொல்லைக்கும் பஞ்சம் இருக்காது. தற்போது பருவநிலை நன்றாக இருப்பதால் எளிதாகச் சென்று வருகிறோம். மழைக்காலத்தில் உயிருக்குப் பயந்து பயந்துதான் இந்தப் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதி மக்கள் வசதிக்காக அதிகாரிகள் பொதுமக்கள் பயன்படுத்த நடைபாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க