கையில் தாலியுடன் திரிந்த இந்து மக்கள் கட்சியினர்..! - தெறித்து ஓடிய காதலர்கள் | hindu makkal kadchi executives are arrested for agitating lovers day

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (14/02/2018)

கடைசி தொடர்பு:19:40 (14/02/2018)

கையில் தாலியுடன் திரிந்த இந்து மக்கள் கட்சியினர்..! - தெறித்து ஓடிய காதலர்கள்

காதலர் தினம் கொண்டாட எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காதலர் கூடும் இடத்தில் கையில் தாலியுடன் சுற்றிய இந்து மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளைப் போலீஸார் கைது செய்தனர். 

காதலர் தினம் எதிர்ப்பு

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் அளித்துக் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்து அமைப்பினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நெல்லையில் அறிவியல் மையத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் உடையார் தலைமையில் நிர்வாகிகள் சிலர் கையில் தாலியுடன் வந்திருந்தனர். இதைப் பார்த்ததும் காதலர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் 50 தாலிக் கயிறுகளுடன் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் உடையார் மற்றும் நிர்வாகிகள் சுடலைமாரி, அய்யாச்சாமி ஆகியோரைக் கைது செய்தார்கள். இதனிடையே, நெல்லை டவுன் பகுதியில் இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயகுமார் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காதலர் தின வாழ்த்து அட்டைகளையும் கிழித்து எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

DYFI

இதனிடையே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நெல்லை ரயில் நிலையம் முன்பாகக் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கொண்டாடி மகிழ்ந்தார்கள். மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமையில் திரண்ட இளைஞர்கள், காதலர் தின அடையாளமாக வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டனர். பின்னர், இதய வடிவிலான பலூன்களைப் பறக்கவிட்டதுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள். காதலர் தினத்தை ஆதரித்தும் வாழ்த்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.