காதலர் தினம் எதிரொலி! காதலர்களுக்குப் பயந்து பூங்காவைப் பூட்டிய போலீஸ்! | police lock the park doors in erode

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/02/2018)

கடைசி தொடர்பு:20:00 (14/02/2018)

காதலர் தினம் எதிரொலி! காதலர்களுக்குப் பயந்து பூங்காவைப் பூட்டிய போலீஸ்!

காதலர் தினம்- பூங்கா

காதலர் தினம் என்பதால் ஈரோட்டில் காதலர்களுக்குப் பயந்து போலீஸார் வ.உ.சி பூங்காவுக்குப் பூட்டுபோட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கிறது வ.உ.சி பூங்கா. இந்தப் பூங்காவானது வழக்கமாகத் தினமும் காலையில் 10 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 8 மணி வரைக்கும் திறந்தே இருக்கும். வாக்கிங் செல்வதற்கு, ஓய்வெடுப்பதற்கு எனப் பலரும் இந்தப் பூங்காவைத் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இன்றைக்கு மதியம் 1 மணி வரை இந்தப் பூங்காவானது திறக்கப்படவில்லை. பூங்காவுக்குப் பூட்டுபோட்டு சுமார் 5 போலீஸார் காவலுக்கு நின்றிருந்தனர்.

ஏன் பூங்கா பூட்டப்பட்டிருக்கிறது என நாம் விசாரணையில் இறங்கினோம். ‘காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் பலரும் இன்று ஜோடி ஜோடியாக இந்தப் பூங்காவுக்கு வருவார்கள். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒருசில அமைப்புகள், தேவையில்லாத பிரச்னைகளைச் செய்வார்கள். அது தேவையில்லாத சலசலப்பை உண்டாக்கும்’ என்ற காரணத்தால் போலீஸார் பூங்காவுக்குப் பூட்டு போட்டதாகத் தெரியவந்தது. மதியம் 1 மணிக்குப் பிறகு, பூங்கா திறக்கப்பட்டாலும் பூங்காவுக்கு வருபவர்களைப் போலீஸார் விசாரித்த பின்னரே உள்ளே அனுப்பினர்.

இதுகுறித்து அங்கிருந்த போலீஸாரிடம் கேட்டபோது, “பூங்காவினுள் உள்ள தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதால்தான் பூங்காவைப் பூட்டி வைத்தோம்” என எதையோ சொல்லி சமாளித்தனர். காதலர்களுக்குப் பயந்து பூங்காவுக்கு போலீஸார் பூட்டுபோட்ட இந்தச் சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.