வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (14/02/2018)

கடைசி தொடர்பு:23:00 (14/02/2018)

'உங்கள் தந்தை ஹெல்மெட் அணியாவிட்டால் ஏறாதீர்கள்'- மாணவர்களுக்கு போலீஸ் அட்வைஸ்

நெல்லை மாநகர போலீஸார் நூதனமான வகையில் ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வை வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பள்ளிக் குழந்தைகள் மூலமாகப் பெற்றோரிடம் போக்குவரத்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் முயற்சி நடைபெற்றுவருகிறது. 

போக்குவரத்து விழிப்பு உணர்வு

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியச் சாலைகளின் ஓரங்களில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், விழிப்பு உணர்வு பதாகைகளையும் நெல்லை மாநகரப் போக்குவரத்து போலீஸார் வைத்துள்ளனர். அத்துடன், ஆண்டுதோறும் நடக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையையும் எழுதி வைத்திருக்கிறார்கள். 

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்பு உணர்வு பேரணிகளும் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதுடன், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அதனால் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க அடுத்த அதிரடியைக் கையில் எடுத்திருக்கிறது, நெல்லை மாநகரக் காவல்துறை.

நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர் கபில்குமார் சரட்கர் ஆலோசனையின்படி, போக்குவரத்து துணை ஆணையர் ஃபெரோஸ்கான் அப்துல்லா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதன்படி, பள்ளிகளுக்குச் செல்லும் போலீஸார், தலைமை ஆசிரியர்களின் உதவியுடன் குழந்தைகளைச் சந்தித்து, ‘உங்களின் தந்தை அல்லது சகோதரர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது அவசியம் ஹெல்மெட் அணிய வலியுறுத்துங்கள். ஹெல்மெட் அணியாமல் உங்களை பள்ளிக்கு அழைத்து வந்தால் நீங்கள் வாகனத்தில் ஏற மறுத்து விடுங்கள்’ என்று அட்வைஸ் செய்தார்கள்.

துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா

இதைப்பற்றி நெல்லை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் ஃபெரோஸ்கான் அப்துல்லாவிடம் பேசுகையில், ’’நெல்லை மாநகரில் கடந்த காலங்களை விடவும் சாலை விபத்துகள் குறைந்துள்ளன. சாலை விபத்துகளில் பெரும்பாலான நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாகன ஓட்டிகளின் கவனக்குறைவே காரணமாக இருக்கிறது. பொதுவாக சாலை விபத்துகள் நடக்கும்போது அதில் 85 சதவிகிதம் மனிதத் தவறுகள் காரணமாகவே நடக்கின்றன. அதனால் கவனமுடன் செயல்பட்டால் விபத்துகளையும் உயிரிழப்பையும் தடுக்க முடியும்.

இரு சக்கர ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என்பதால், அதனை அவர்களின் குழந்தைகள் மூலமாகச் சொல்ல வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். அடுத்தவர்கள் நல்லதைச் சொல்வதை கேட்காவிட்டாலும் கூட தங்களின் அன்புக்குரிய குழந்தைகள் சொல்வதைக் கேட்க மறுக்க மாட்டார்கள். அதனால்தான் பள்ளிகளுக்குச் சென்று சாலை விழிப்பு உணர்வு குறித்து குழந்தைகளுக்குச் சொல்வதுடன் அவர்களிடம் ஒரு நோட்டீஸைக் கொடுத்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்கிறோம். 

இதுவரை 3 பள்ளிகளில் இந்த நடைமுறையைப் பின்பற்றி இருக்கிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து இருக்கிறது. அதனால் அடுத்தடுத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று மாணவர்கள் மூலமாக ஹெல்மெட் அவசியத்தை பெற்றோருக்கு எடுத்துச் சொல்ல இருக்கிறோம்’’ என்றார் உற்சாகமாக. நெல்லை மாநகரக் காவல்துறையின் இந்த நூதனப் பிரசாரத்துக்குப் பொதுமக்களிடம் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.