வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (14/02/2018)

கடைசி தொடர்பு:20:04 (14/02/2018)

புதுச்சேரியில் டீ மாஸ்டரான அமெரிக்கத் தூதர்! பிரமித்துப்போன வாடிக்கையாளர்கள்

``புதுச்சேரி மாநிலத்துக்கு ஆங்கில வழிக் கல்வி அளிக்கவும் மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றைப் பகிர்ந்து கொள்வதாகவும் அமெரிக்கத் தூதர் உறுதியளித்திருக்கிறார்” என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி

இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக கென்னத் ஜஸ்டர் என்பவர் கடந்த 2017 நவம்பர் 13-ம் தேதி நியமிக்கப்பட்டார். 62 வயதான அவர் இன்று காலை புதுச்சேரிக்கு வருகை தந்திருந்தார். முதலில் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அவர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியையும் அதன்பிறகு, சட்டசபைக்குச் சென்று முதலமைச்சர் நாராயணசாமியையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “புதிய அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட கென்னத் ஜஸ்டர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். புதியதாகப் பொறுப்பேற்றுள்ளதால் புதுச்சேரி பகுதி எப்படி உள்ளது என்பதையும் எந்தெந்த விஷயங்களில் புதுச்சேரி கவனம் செலுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ளவும் வந்திருக்கிறார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நல்லுறவு இருக்கிறது. 

புதுச்சேரி

புதுச்சேரி அரசைப் பொறுத்தவரை கல்வி, மருத்துவம், சுற்றுலா, சட்டம் ஒழுங்கு, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் தொழில் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது என்பதைத் தெரிவித்தோம். உயர் கல்வியில் புதுச்சேரி மாநிலம் 5 வது இடத்தில் இருப்பதை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளதையும் தெரிவித்தோம். மேலும், நம் மாநிலத்துக்கு ஆங்கில வழிக் கல்வி அளிக்கவும் புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றைப் பகிர்ந்துகொள்வதாகவும்  அவர் உறுதியளித்திருக்கிறார். பிரதமர் மோடி 24-ம் தேதி புதுச்சேரி வருகை தர இருப்பதாக கடிதம் வந்துள்ளது. அப்போது துறைமுகத்தைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதற்கு அவர் ஒப்புக்கொள்வது குறித்து அடுத்த கடிதத்தில்தான் தெரியவரும். இன்று மாலை தொழில் மேம்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.

டீ மாஸ்டர்

அதையடுத்து புதுச்சேரி கடற்கரை சாலைக்குச் சென்ற கென்னத் ஜஸ்டர் அங்குள்ள காந்தி திடல் மற்றும் பாரதி பூங்காவைச் சுற்றிப் பார்த்தார். அப்போது அங்கு குப்பை அள்ளும் பணியில் இருந்த பெண்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதையடுத்து கப்ஸ் கோயில் என்றழைக்கப்படும் புனித மேரி தேவாலயம்,  மணக்குள விநாயகர் கோயில், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டார். அப்போது ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள டீக்கடையைப் பார்த்து அங்கு டீ குடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அதிலும் பாய்லரில் போடப்படும் டீதான் தனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கிக் குடித்தார். அப்போது அங்கிருந்த டீ மாஸ்டரிடம் பேசிய அவர் தானும் அப்படி டீ ஆற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். உடனே டீ மாஸ்டரும் டீக்குவளையை அமெரிக்கத் தூதரிடம் வழங்க, அதில் டீ ஆற்றி மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தார் கென்னத் ஜஸ்டர். இதைப் பார்த்த கடைக்கு டீ குடிக்க வந்தவர்கள் பிரமித்துப் போனார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க