வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (14/02/2018)

கடைசி தொடர்பு:23:30 (14/02/2018)

இடுகாடு செல்ல பாதை இல்லை.. விளை நிலங்கள் வழியாக பிணத்தைச் சுமக்கும் அவலம்!

நெல்லை மாவட்டத்தில் இடுகாடு செல்வதற்கு பாதை வசதி இல்லாததால் நெல் வயல் வழியாக இறந்தவர்களின் உடல்களை சிரமப்பட்டுத் தூக்கிச் செல்லும் அவலம் தொடர்கிறது. உடனடியாக இடுகாட்டுக்குச் செல்வதற்கான நிரந்த பாதை அமைத்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. 

இடுகாடு பாதை இல்லை

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் உதயமார்த்தாண்டபேரி. மிகவும் பின் தங்கிய கிராமத்தில் 300-க்கும் அதிகமாக குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடுகாடு ஊருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி எதுவுமே கிடையாது. அதனால் வயல்களின் வழியாகவே இறந்தவர்களின் உடல்களை மிகுந்த சிரமத்துடன் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. 

தற்போது வயல்களில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. அதனால் நெல் பயிர்களை மிதித்துக் கொண்டு பிணத்தைச் சுமந்து செல்கிறார்கள். விளை நிலத்தில் வாழை பயிரிடப்பட்டு இருக்கும்போது மிகுந்த சிரமத்தைச் சந்திக்க வேண்டியதிருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். வாழைகளை வெட்டி வழி ஏற்படுத்திய பின்னர் பிணத்தைச் சுமந்து செல்வதால் நிலத்தில் பயிரிட்ட விவசாயிகளின் அதிருப்திக்கு உள்ளாக வேண்டியதிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

கடந்த 12-ம் தேதி இந்த கிராமத்தைச் சேர்ந்த நம்பி என்ற 65 வயது முதியவர் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய இடுகாட்டிற்கு செல்ல முறையான பாதை இல்லாததால் தனியார் விளை நிலங்கள் வழியாகவே உடலைக் கொண்டு சென்ரணர். இடுகாட்டுக்குச் செல்ல பாதை வசதி செய்து கொடுக்குமாறு அரசியல்வாதிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.