அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..! காவல்துறை விசாரணை

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிவேல் அவரது தோட்ட வீட்டில் இறந்துகிடந்தார். அவரது மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள தண்ணீர்பந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிவேல். அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர் 2001 - 2006 -ம் ஆண்டு வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஈமு கோழி விவகாரத்தில் இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். தற்போது அ.தி.மு.கவில் இவர் எந்தப் பொறுப்பிலும் இல்லை. இவர் குடும்பத்துடன் எரியோடு அருகேயுள்ள புதுரோடு பகுதியில் வசித்து வந்தார்.

இவருக்கு சொந்தமான தோட்டம் தண்ணீர் பந்தம்பட்டியில் உள்ளது. இன்று இரவு தோட்டத்தில் தனியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் சுமார்  8.30 மணியளவில் தோட்ட வீட்டில் இறந்த நிலையில் அவரது உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. உடலில் பெரிய காயங்கள் ஏதும் இல்லாத நிலையில் கொலையா, மாரடைப்பா என பல்வேறு கோணங்களில்  காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!