வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (15/02/2018)

கடைசி தொடர்பு:05:15 (15/02/2018)

40 நாடுகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம்: இந்தியாவுக்கு அந்த நிலை வந்துவிடக்கூடாது..! தண்ணீர் மனிதர் அறைகூவல்

40 நாடுகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அந்த நிலை வந்துவிடக்கூடாது என்று தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங் தெரிவித்துள்ளார். 

தமிழக ஆறுகள் வளமீட்பு இயக்கம் சார்பில் இன்று புதுக்கோட்டையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தியாவின் தண்ணீர் மனிதர் என அழைக்கப்படும் ராஜேந்திரசிங் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான தடுப்பணைகளையும் குளங்களையும் அமைத்து, அங்கு நிலவிய தண்ணீர் பஞ்சத்தைப் போக்கியவர். நீர்மேலாண்மைக்கான நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ஸ்டாக்ஹோம் நீர் பரிசு வழங்கி இவரை சுவிடன் நாடு பெருமைப்படுத்தியது. 

கருத்தரங்கத்தில் உரையாற்றிய ராஜேந்திரசிங், ‘’உலகில் 50 நாடுகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சிரியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். தண்ணீர் பஞ்சத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு குடிப்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது. அரசாங்கம் தண்ணீர் கொடுக்கும் என மக்கள் எதிர்பார்க்கக்கூடாது. ஆட்சியாளர்கள் நதிகளை இணைப்பார்கள் என நம்பிக்கொண்டிருக்கக்கூடாது. விவசாயிகள் தங்களால் இயன்ற அளவுக்கு சிறு சிறு குளங்களை உருவாக்கி பூமிக்குள் தண்ணீரை சேகரிக்க வேண்டும். மரம், செடி, கொடிகள் அந்த தண்ணீரை பத்திரமாக பாதுகாக்கும். தண்ணீரை சேமிப்பது மக்களின் கடமை. கிராமப்புற மக்களுக்கும் நீர்நிலைகளுக்குமான உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.” என்றார்.