தொட்டி இருக்கு..! தண்ணீர் இல்லை..! வனத்துறையின் கவனத்திற்கு | Water drought in Theni forest areas

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/02/2018)

கடைசி தொடர்பு:06:00 (15/02/2018)

தொட்டி இருக்கு..! தண்ணீர் இல்லை..! வனத்துறையின் கவனத்திற்கு

வெயிலின் தாக்கத்தால் காடுகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு காட்டுப் பகுதிகளில் வனத்துறையின் சார்பில் வன விலங்குகளின் தாகத்தைப் போக்க பிரம்மாண்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. தொடர்ச்சியாக அந்தத் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதனால், தண்ணீர் தேடி வன விலங்குகள் மக்கள் வசிப்பிடங்களுக்குள் நுழைவது குறையும். இந்நிலையில், கோடைக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் சூழலில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

காடுகளின் பரப்பு அதிகமாக இருக்கும் தேனி மாவட்டத்தில், இந்த வெயிலின் தாக்கத்தால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி மக்கள் வசிப்பிடங்களுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தேனி மாவட்ட வனப்பகுதிகளில் இருக்கும் அனைத்து தண்ணீர் தெட்டிகளின் தற்போதைய நிலை பற்றி ஆய்வு செய்து, தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, உடனே தண்ணீர் நிரப்பி வைக்கும் போது வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தடுக்கப்படும். பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் இருக்கும் தண்ணீர் தொட்டி தற்போது காய்ந்து கிடக்கிறது. இவ்வனப்பகுதியில் வசிக்கும் மான், சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் தண்ணீர் தேடி மக்கள் அதிகம் வந்துசெல்லும் கும்பக்கரை அருவிக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், மனிதன் – வனவிலங்கு மோதல் உருவாகும். எனவே, தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட இந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவது அவசியமாகிறது` என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.