வெளியிடப்பட்ட நேரம்: 06:15 (15/02/2018)

கடைசி தொடர்பு:06:15 (15/02/2018)

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரை விடுவிக்க கிராம மக்கள் மனு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெலைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்மக்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஊர்மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது எனவும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையையும் மூட வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள கிராமத்தில் ஒன்றான குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 2 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 43 சிறுவர், சிறுமியர், 142 பெண்கள் உட்பட 257 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒரு பெண் உட்பட 8 பேர் மீது நேற்று இரவோடு இரவாக வழக்குப் பதிவு செய்து தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் ஜெ-3 நீதிமன்ற நீதிபதி ரோஸ்கலா முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார். 

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது எனவும் வலியுறுத்தி குமரெட்டியாபுரம் ஊர்மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேரை விடுதலை செய்யும் வரை கிராமத்திலேயே போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க