வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (15/02/2018)

கடைசி தொடர்பு:07:00 (15/02/2018)

நெல்லை-தென்காசி வழிச்சாலையை சீர் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு..!

ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'நெல்லையில் இருந்து தென்காசி வரை செல்லும் வழியைத் தான் சுற்றுலாப் பயணிகள் பலரும்  பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகளும் இதன் வழியாக அதிக அளவு தங்கள் விளைப் பொருட்களைக் கொண்டுச் செல்கின்றனர். ஆனால் சாலை மிகவும் குண்டு குழியுமாக உள்ளதால், நெல்லையில் இருந்து ஆலங்குளம் வரை வெறும் 29 கிலோமீட்டர் தூரமே உள்ள சாலையை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது.

மேலும் இந்தச் சாலையை கொல்லத்திற்கு செல்லும் கேரள மக்களும், அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சாலையில் மராமத்து பணிகள் செய்து, மேம்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும். மேலும், இந்தச் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. அதனையும் செயல்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது, இதனை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, இந்த சாலையை சரி செய்து புதுப்பித்து அதன் புகைப்பட ஆதாரங்களுடன் மார்ச் 2-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்று நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.