வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (15/02/2018)

கடைசி தொடர்பு:10:37 (15/02/2018)

பெரம்பலூரில் பிரபல ரவுடி படுகொலை..! பதற்றத்தில் பொதுமக்கள்

பெரம்பலுாரில், பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தொடரும் பழிக்குப்பழி சம்பவங்களால், பெரம்பலூர் மாவட்டமே அச்சத்தின்பிடியில் உறைந்திருக்கிறது.

பெரம்பலுார் மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர், பன்னீர் என்கிற பன்னீர்செல்வம். பிரபல ரவுடியான இவர்மீது, மூன்று கொலை வழக்குகள் உட்பட பல்வேறு அடிதடி மற்றும் ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அங்காளம்மன் கோயில் அருகே, இரவு 8 மணியளவில் பன்னீர்செல்வத்தை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பி ஓடியுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலுார் போலீஸார் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில், இரவு 9 மணியளவில் துறைமங்கலம் கே.கே.நகரைச் சேர்ந்தவர்களான கபிலன், வினோத், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய மூன்று வாலிபர்கள், பெரம்பலுார் போலீஸில் சரணடைந்தனர். இக்கொலையில் தொடர்புடைய மேலும் மூன்று இளைஞர்களைப் பெரம்பலுார் போலீஸார் தேடிவருகின்றனர். 

பன்னீர்செல்வம், பல கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால், பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்திருக்காலாம் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர். சரணடைந்தவர்களிடம், இவர்கள் யார்... எதற்காகக் கொலைசெய்தார்கள் என்று விசாரித்து வருகின்றனர்.