அரசு செட்டாப் பாக்ஸ் பொருத்த கூடுதல் கட்டணம்..! கரூரில் ஆட்சியரிடம் புகார்

 

 'கரூரில், செட்டப் பாக்ஸ் பொருத்த,அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். தட்டிக் கேட்பவர்கள் வீடுகளில் இணைப்பை முன்னறிவிப்பின்றி துண்டித்துவிடுகிறார்கள். இதை நீங்கள்தான் தட்டிக்கேட்க வேண்டும்' என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாவட்டத் துணை அமைப்பாளர் சந்திரசேகர் புகார் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில், 'கரூர் மாவட்டம் முழுக்க இந்த முறைகேடு நடக்கிறது. குறிப்பாக, தாந்தோணிமலை பகுதியில் நடக்கிறது. அந்தப் பகுதியில், தமிழக அரசு கேபிள் இணைப்பு வழங்கும் கேபிள் ஆபரேட்டர் வாசு என்பவர், தாந்தோணிமலை நகராட்சிப் பகுதியில், அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிக தொகைக்கு கேபிள் செட்டாப் பாக்ஸை  வீடுகளில் பொருத்துகிறார்.

இதில், முன் பணமாக 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பெற்றுக்கொள்கிறார்கள். இந்த முறைகேட்டை தட்டிக் கேட்டால், தட்டிக் கேட்பவர்களின் வீடுகளில் கேபிள் இணைப்பை முன்னறிவிப்பின்றி துண்டித்துவிடுகின்றனர். இப்படிப் பல வீடுகளில் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூல்செய்ய வேண்டும். சட்டத்துக்கு விரோதமாக அதிகத் தொகை வசூல்செய்யும் ஆபரேட்டர் வாசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னறிவிப்பின்றி இணைப்பு துண்டிக்கப்பட்டவர்களின் வீடுகளில் மறுபடியும் கேபிள் இணைப்பை வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!