வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (15/02/2018)

கடைசி தொடர்பு:10:21 (15/02/2018)

சிங்கப்பூர் தமிழர் மரணம்! - விமானத்தில் வழங்கிய நூடுல்ஸ் காரணமா?

விமானப் பயணிகளுக்கு வழங்கப்படும் நூடுல்ஸை சாப்பிட்ட சிங்கப்பூர் தமிழர் ஒருவர் மரணமடைந்த சம்பவம், பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

noodles

சிங்கப்பூரைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் சுமன், சிங்கப்பூர் தமிழரான இவரின் மூதாதையர்கள், மூன்று தலைமுறைக்கு முன்பு இந்தியாவிலிருந்து  சிங்கப்பூர் சென்றவர்கள். தற்போது சிங்கப்பூர் குடியுரிமைபெற்றுள்ள இவர், சிங்கப்பூர் ஆளும் கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், இவர் மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம்செய்யத் திட்டமிட்டதுடன், கடந்த 7-ம் தேதி சிங்கப்பூரிலிருந்து விமானம்மூலம் திருச்சி வந்துள்ளார். அடுத்து,  திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த நொச்சியத்தில் இருக்கும் அவரின் நண்பர் ஒருவரின் வீட்டில்  தங்கியிருந்தார். இந்நிலையில், அவர் வயிற்று வலியால் தவித்ததாகக் கூறப்பட்டது. தான் விமானத்தில் வந்தபோது நூடுல்ஸ் கொடுக்கப்பட்டதாகவும், அதைச் சாப்பிட்டதிலிருந்து அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுவருவதாகவும் சுமன் தன்னுடைய நண்பரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சுமன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்றுவந்தார். ஆனால், அவருக்கு வயிற்றுவலி சரியாகவில்லை. இந்நிலையில் சுமனுக்கு நேற்று மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார். அடுத்த சில மணித்துளிகளில் அவர்  மயக்கமடைந்து சுயநினைவை இழந்தார். மயங்கிய நிலையில்  இருந்த சுமனை அவருடைய நண்பர்கள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுமன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் எஸ்.ஐ., மோகன்ராஜ் தலைமையிலான போலீஸார், மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தியதுடன், சுமன் உடலை மருத்துவப் பரிசோதனை செய்திட பரிந்துரைசெய்தனர்.  அடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சுமன் விமானத்தில் சாப்பிட்ட நூடுல்ஸே அவருக்கு எமனாக மாறியதா? அல்லது வேறு காரணமா என்பதுகுறித்து விசாரித்துவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க