வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (15/02/2018)

கடைசி தொடர்பு:16:30 (12/07/2018)

'அறிவியல் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது'- அரசுப்பள்ளி மாணவர்கள் பிரமிப்பு

அரசுப்பள்ளி மாணவர்கள்

''உண்மையில் எங்களுக்குள் அறிவியல் சம்பந்தமான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது'' என்று அறிவியல் ஆய்வகத்தைப் பார்வையிட்ட பின்னர் அரசுப்பள்ளி மாணவர்கள் பிரமிப்புடன் கூறினர்.

பள்ளி கல்வித்துறை, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம், ராஷ்ட்ரிய அவிஸ்கார் அபியான் மூலம் பள்ளி மாணவர்கள் மத்தியில் விஞ்ஞானம் மற்றும் கணிதத்தில் அன்பு மற்றும் குழந்தைகள் மத்தியில் தொழில்நுட்பத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் நோக்கில் உயர்கல்வி நிறுவனங்களை மாணவர்கள் பார்வையிடும் நோக்கில், கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்டத்தில் உள்ள என்.எஸ்.என் பொறியியல் கல்லூரி அறிவியல் ஆய்வகத்தைப் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாகக் கல்லூரி செயலாளர் நல்லுசாமி, மாணவர்களிடம் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு  குறித்து எடுத்துரைத்தார். நிகழ்தகவு மற்றும் இயற்கணிதம் குறித்து கணிதத்துறை பேராசிரியர்கள் விக்னேஷ்வரி, ருக்மணி ஆகியோர் எளிய முறையில் மாணவர்களுக்கு விளக்கினார்கள். இயற்பியல் துறை பேராசிரியர் செல்வக்குமார், பறவைகள் பறப்பதில் உள்ள அறிவியல் தத்துவம், விமானம் இயக்கம், மைய நிறை, மைய அழுத்தம் இடையே உள்ள தொடர்பு, மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு, ஆய்வகத்தில் உள்ள கருவிகள் குறித்து எளிய முறையில் மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து ஆய்வகம் மற்றும் நூலகத்தை மாணவர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் க.ரேணுகா செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் வெள்ளியணை பள்ளித் தலைமை ஆசிரியர் ச.தமிழரசன்,அறிவியல் ஆசிரியர்கள் து.கவிதா,ம.பூலோக அரசி,இளம் விஞ்ஞானிகள் குழு வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 65 பேர் பங்கேற்றனர், "இந்நிகழ்வு உண்மையில் எங்களுக்குள் அறிவியல் சம்பந்தமான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. விஞ்ஞானம் சார்ந்து அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதலையும் தந்திருக்கிறது" என்று மாணவர்கள் பிரமிப்புடன் கூறினர்.