ரவுடி பினுவுக்கு லாரி ஷெட் உரிமையாளரின் ’ஹேப்பி பர்த்டே’ பரிசு! - பினு, வேலு நட்பை விவரிக்கும் போலீஸ்

 ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாடிய லாரி ஷெட்

ரவுடி பினுவுக்குப் பிறந்தநாள் கொண்டாட இடம் கொடுத்த லாரி ஷெட் உரிமையாளர் வேல்முருகன், நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவர்குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 சென்னையை அடுத்த மாங்காடு, மலையம்பாக்கம் கிராமத்தில் உள்ள வேலு என்பவரின் லாரி ஷெட்டில், தன்னுடைய 50-வது பிறந்தநாளை ரவுடி பினு, கூட்டாளிகளுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். அரிவாளால் கேக் வெட்டி, கூட்டாளிகளை உற்சாகப்படுத்திய பினு மற்றும் அவரது கூட்டாளிகளை நள்ளிரவில் போலீஸார் சுற்றிவளைத்தனர். அதில் பினு, கனகு என்ற கனகராஜ், விக்கி உள்ளிட்ட சில ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர். இதில், பினு மட்டும் போலீஸில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திய பின்  சிறையில் அடைத்தனர். தற்போது, தலைமறைவாக இருக்கும் கனகு, விக்கி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வேலு சரணடைந்தார். அவர் தொடர்பாக போலீஸாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. மலையம்பாக்கத்தில் லாரி ஷெட் நடத்தும் வேலு என்ற வேல்முருகன் மீது செம்மரக்கடத்தல் தொடர்பான வழக்குகளும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அதாவது, செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட வேலுவுக்கும் பினுவின் கூட்டாளிக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்துள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள அந்த ஷெட்டில்தான் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் தயார் செய்யப்படுமாம். கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களை முற்றிலுமாக அங்கு மாற்றிவிடுவார்களாம். இதனால், யாராலும் வேலுவை நெருங்க முடியாது. மேலும், தொழில் போட்டியாளர்களைச் சமாளிக்க பினு கூட்டாளிகளின் உதவியை வேலு நாடியதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக, மாதந்தோறும் பினு கூட்டாளிகளுக்கு மாமூல் கொடுத்தாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போலீஸிடம் சரண் அடைந்த ரவுடி பினு

 இந்த நட்பில்தான், பினுவின் பிறந்தநாளைத் தன்னுடைய லாரி ஷெட்டில் நடத்த வேலு சம்மதித்தாராம். மது விருந்து தொடங்கி அனைத்துச் செலவுகளையும் வேலு ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவே தன்னுடைய பிறந்த நாள் பரிசு என்று பினுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், போலீஸாரால் பிறந்தநாள் கொண்டாட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.  வேலுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீஸார் முடிவுசெய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளைத் தனிப்படை போலீஸார் செய்துவரும் நிலையில், தப்பி ஓடிய கனகு, விக்கியைத் தேடுவதையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 பினு கொடுத்த வாக்குமூலத்தில், கனகுவின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இதனால், கனகு சிக்கினால்தான் முழு விவரம் தெரியவரும் என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர். கனகு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்துவருகின்றனர். அதில், போலீஸாருக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், இன்னும் சில தினங்களில் கனகுவைப் பிடித்திடுவோம் என்ற நம்பிக்கையில் போலீஸார் உள்ளனர். செம்மரக்கடத்தலில் தொடர்புடைய வேலுவைத் தொடர்ந்து பினுவுக்கும் செம்மரக்கடத்தலில் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. அதுதொடர்பான விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். 

நீதிமன்றத்தில் சரண் அடைந்த லாரி ஷெட் உரிமையாளர் வேலு

 இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 'மலையம்பாக்கம் கிராமத்தில் உள்ள வேலுவின் லாரி ஷெட்டில், பெரும்பாலான நேரங்களில் யாருமே இருக்க மாட்டார்கள். மேலும், லாரி ஷெட்டுக்குரிய அறிகுறிகள் அங்கு எதுவும் இருக்காது. விளைநிலங்களுக்கு நடுவில் மேற்கூரை மட்டுமே அங்கு போடப்பட்டிருக்கும். தற்போதுதான் அது லாரி ஷெட் பெயரில், செம்மரக்கடத்தலுக்குப் பயன்படுத்தும் வாகனங்களைத் தயார்செய்யும் இடம் என்று தெரியவந்துள்ளது. வேலு மீதுள்ள வழக்குகள் எல்லாம் தூசி தட்டப்பட்டுவருகின்றன. வனத்துறை சார்பில் வேலு மீது போடப்பட்டுள்ள வழக்குகள்குறித்து விசாரித்துவருகிறோம். வேலுவின் கூட்டாளிகள் யார் என்றும் விசாரணை நடந்துவருகிறது. பினுவுக்கும் வேலுவுக்கும் உள்ள நட்புகுறித்த தகவல் சேகரிக்கப்பட்டுவருகிறது. எங்களுடைய முதல்கட்ட விசாரணையில், செம்மரக் கடத்தலில்தான் வேலுவுக்கும் பினுவுக்கும் நட்பு இருந்துள்ளது' என்றனர். 

நீதிமன்றத்தில் சரணடைந்த வேல்முருகன்,  நீதிபதி முருகனிடம் தன்னுடைய தரப்பு விளக்கத்தைத் தெரிவித்துள்ளார். அதில், 'ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தனது லாரி ஷெட்டில் அப்படி ஒரு பிறந்தநாள் விழா நடந்ததே தனக்குத் தெரியாது. அதில், நான் கலந்துகொள்ளவில்லை. பினு யார் என்றே எனக்குத் தெரியாது. அந்தச் சம்பவத்தில் போலீஸார் என்னைத் தேடிவருவதால், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளேன்' என்று கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து, வேல்முருகனை வரும் 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!