காதலர் தினத்தன்று மனநலம் குன்றியவர்களை நெகிழவைத்த இளைஞர்கள்! | Young people celebrating valentines day with mental illness patients

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (15/02/2018)

கடைசி தொடர்பு:14:10 (15/02/2018)

காதலர் தினத்தன்று மனநலம் குன்றியவர்களை நெகிழவைத்த இளைஞர்கள்!

காதலர் தினம்

உலகக் காதலர் தினமான நேற்று இரவு மனநலம் குன்றிய 80 பேர்களுக்கு உணவளித்து காதலர்தினத்தை வித்தியாசமாகக்  கொண்டாடி இருக்கிறார்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த சில இளைஞர்கள்.

காதலர் தினம் என்றாலே காதலர்களுக்கு மட்டுமே சொந்தமான, அவர்கள் மட்டுமே கொண்டாடும் ஓர் உலகப் பண்டிகைபோல் மாறிவிட்டது. ஆணும் பெண்ணும் தங்களுக்குள் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவது, மட்டும்தான் காதலர்தினம் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் மத்தியில், அதனை உடைத்து, மனநலம் குன்றியவர்களிடம் அன்பு செலுத்துவதும் மனிதநேயம் கொண்ட காதல்தான் என்பதை தங்கள் செயல் மூலமாக நேற்றிரவு நிரூபித்து இருக்கிறார்கள் புதுக்கோட்டை நகர 'தமிழக மக்கள் ஜனநாயக கட்சி'யைச் சேர்ந்த இளைஞர்கள். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூரில் இருக்கும்  மனநலக் காப்பகத்தில் மனநலம் குன்றிய 80 மாணவர்களோடு கேக் வெட்டி, உணவு வழங்கி தங்களது அன்பை மாணவர்களோடு பகிர்ந்துகொண்டார்கள். நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக இரண்டுமணிக்கும் மேலாக நடந்த இந்தக் காதலர்தின விழாக்கொண்டாட்டத்தில் ஆரம்ப நிகழ்வாக, ஆட்டிசம் பாதிப்பு உள்ள சிறுவன் ஒருவன் கேக் வெட்டினான்.

காதலர் தினம்

அந்த கேக்கில், 'அன்பைக் கொண்டாடுவோம் அன்பான உறவுகளோடு' என்று எழுதப்பட்டிருந்ததை மற்றொரு ஆதரவற்ற சிறுமி சத்தமாக வாசித்தாள். அதற்கு எல்லோரும் உற்சாகம் பொங்கக் கைத்தட்டினார்கள்.எல்லோருக்கும் அந்த இளைஞர்கள் கேக்கை ஊட்டிவிட்டார்கள். அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. இதனை ஒழுங்குபடுத்தியிருந்த நியாஸ் அகமது என்பவர்  பேசும்போது, "இன்றைக்கு உலகம் முழுக்க உள்ள காதலர்கள், காதலர்தினத்தை பார்க், பீச், சினிமா, பிரியாணி, பரிசு என்று விதவிதமாகக் கொண்டாடிவிட்டுத் தூங்கப் போய்விட்டார்கள்.

இதுவா காதலர்கள் தினம்? அன்புக்காகவும் மற்றவர்களின் அரவணைப்புக்காகவும் ஏங்கும் முதியவர்கள், ஆதரவற்றவர்கள், மனநலம் குன்றியவர்களோடு அன்பையும் பாசத்தையும் பறிமாறிக் கொள்வதுதான் உண்மையான காதலர்கள் தினம். காதலர்கள் ஒன்று சேர்ந்து இப்படியான காரியங்களை இனிவரும் காலங்களில்  செய்யவேண்டும். அவர்கள் தங்களுக்கான கொண்டாட்டங்களைக் கொண்டாடிக் கொள்ளட்டும். அப்படியே இதுபோன்ற காப்பகங்களுக்குச் சென்று, அவர்களுடன் காதலர்தினத்தைக் கொண்டாடி  தங்களது அன்பை வெளிப்படுத்தட்டும். தீபாவளி, ரம்ஜான்,கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை நாள்களில் இவர்களுக்கு உணவளித்துக் கொண்டாடுவதைப்போல, காதலர்களும் தங்களது பண்டிகை நாளான காதலர்தினத்தை இவர்களோடு கொண்டாட வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்றுதான் நேற்று நாங்கள் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களோடும் ஆதரவற்ற முதியவர்களோடும்  இந்தக் காதலர் தினத்தைக் கொண்டாடினோம் "என்றார்.