வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (15/02/2018)

கடைசி தொடர்பு:14:25 (15/02/2018)

சென்னை ஐ.டி பெண் ஊழியரைத் தாக்கியவர்களைக் காட்டிக்கொடுத்த `டூவீலர்' 

மாதிரி படம்

மாதிரி படம் 


சென்னையில் ஐ.டி. பெண் ஊழியரைக் கொடூரமாகத் தாக்கிய நகை, செல்போன், பைக் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். அந்த பைக், செம்மஞ்சேரியில் உள்ள டாஸ்மாக் பார் முன்பு அனாதையாக நின்றதை போலீஸார் கண்டறிந்துள்ளார். அதன்மூலம் ஐ.டி பெண் ஊழியரைத் தாக்கியதாக 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி - காரணை சாலையில் 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது முகம் ரத்த வெள்ளத்தில் மிதந்தது. முகத்தின் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன. அந்தப் பெண்ணை மீட்ட பள்ளிக்கரணை போலீஸார், பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சுயநினைவு திரும்பிய அந்தப் பெண் குறித்த முழுவிவரம் தெரியவந்தது.

அவரது பெயர் நிகிதா (பெயர் மாற்றம்) என்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும், நாவலூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரியவந்தது. நாவலூரை அடுத்த தாழம்பூரில் தோழிகளுடன் அவர் தங்கியிருந்த தகவலும் போலீஸாருக்குத் தெரிந்தது. வீடு திரும்பிய சமயத்தில் அந்தப் பெண்ணை வழிமறித்த மர்மகும்பல், அவரைக் கொடூரமாகத் தாக்கியதும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 நிகிதாவின் செல்போன் மற்றும் டூவீலர் மூலம் விசாரணையைத் தொடங்கிய போலீஸார், டூவீலரைக் கண்டுபிடித்துள்ளனர். செம்மஞ்சேரியில் உள்ள டாஸ்மாக் பார் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை போலீஸார் மீட்டெடுத்துள்ளனர். அடுத்து அதில் பதிவாகியிருந்த கைரேகை மூலம் 6 பேர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் துருவித் துருவி விசாரணை நடந்துவருகிறது. அதில், ஒருவர் கண்ணகி நகரைச் சேர்ந்த பழைய குற்றவாளி என்று போலீஸார் தெரிவித்தனர். 

நிகதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை

சம்பவத்தன்று என்ன நடந்தது என்று நிகிதாவிடம் போலீஸார் வாக்குமூலமாகப் பெற்றுள்ளனர். அந்த வாக்குமூலம் அடிப்படையில் நிகிதா டூவீலரில் வந்தபோது அவரை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வழிமறித்துள்ளனர். இருட்டான அந்தப் பகுதியில் மர்மநபர்களின் முகம் அவருக்குச் சரிவர தெரியவில்லை. அவர்களிடமிருந்து நிகிதா தப்பிச்சென்ற டூவீலரை வேகமாக ஓட்ட முயற்சி செய்துள்ளார். அதைப்பார்த்த மர்ம நபரில் ஒருவர், நிகிதாவைத் தாக்கியுள்ளார். அதில் அவர் மயங்கியுள்ளார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை எனச் சொல்லியுள்ளார்.

 நிகிதாவுக்கு ஏற்பட்ட கொடூரத்தைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். நிகிதாவின் பெற்றோர் வயதானவர்கள் என்பதால் முதலில் நடந்த சம்பவத்தை போலீஸார் அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை. நிகிதாவின் சகோதரிக்குத் தெரிவித்து அவர் மூலம்தான் உறவினர்களுக்கு நடந்த சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நிகிதாவைப் பார்க்கவந்த அவருடைய தோழிகள் கண்கலங்கினர். அங்கு இருந்த போலீஸாரிடம், நிகிதாவைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

நிகிதாவின் உடல்நலம் தேறிவருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸாரின் சந்தேகப்பார்வை வடமாநில இளைஞர்கள் மீதும் விழுந்துள்ளது. நிகிதாவின் ஐ போன் மூலம் சைபர் கிரைம் போலீஸார் குற்றவாளிகளைக் கண்டறிய முயற்சி செய்தனர். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் கடைசியாகத் தாழம்பூர் சிக்னலைக் காட்டியுள்ளது. மேலும், அதன் அருகில்தான் நிகிதாவின் டூவீலரும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீஸார் ஆராய்ந்துவருகின்றனர். அதில் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வழக்கில் போலீஸாருக்கு துருப்புச்சீட்டாக டூவீலர் உள்ளது.