Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது'' - திருநங்கை ஷானவி

தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நாடு எவ்வளவுதான் வளர்ந்தாலும், திருநங்கைகள் தினம்தினம் போராடித்தான் அவர்களுடைய உரிமையைப் பெறுகிற நிலை இந்த நொடி வரை நிலவுகிறது. எங்களிடம் திறமை இருந்தும் இந்தச் சமூகம் ஏன் புறக்கணிக்கிறது? எங்களது உரிமைகளைக் கொடுப்பதற்கே ஏன் இவ்வளவு தயங்குகிறது என்கிற அவர்களின் வேதனையான கேள்விகளுக்கு, அரசும் சமூகமும் காதுகளைப் பொத்திக்கொண்டு இருக்கிறது. அந்தப் புறக்கணிப்பின் உச்சம்தான், 'தயவுசெய்து என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்' என்கிற ஒரு திருநங்கையின் முறையீடு. இந்த முறையீட்டால் கருணைக் கொலை செய்யப்பட்டிருப்பது, நமது மனிதத்தன்மைதான்.

திருநங்கை ஷானவி

திருநங்கையான ஷானவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள மனு கடிதம்தான் அது. நாடு முழுவதும் அந்தக் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷானவியைத் தொடர்புகொண்டு பேசினோம். 

''என் சொந்த ஊர் திருச்செந்தூர். பல்வேறு சிரமங்களைக் கடந்து பொறியியல் பட்டப்படிப்பை முடிச்சேன். என் குடும்பத்திலேயே நான்தான் முதல் பட்டதாரி. படிப்பு முடிஞ்சதும் ஒரு தனியார் நிறுவனத்தில் என்னைப் பெண்ணாக ஏற்றுக்கொண்டு என்னுடைய திறமைக்கு ஏற்ற வேலையை வழங்கினார்கள். ஒரு வருடத்திற்கு, வாடிக்கையாளருக்கு உதவும் அதிகாரியாகப் பணியாற்றினேன். ஒரு வருஷத்துக்கு அப்புறம், முறையாக பாலியல் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இதனால், இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டேன். பல திருநங்கைகளின் பெற்றோர்கள்போலவே, என் இந்த முடிவை ஏற்காமல் திட்டினார்கள். அதனால் அவர்களை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டது. என் வாழ்க்கையை எனக்காக வாழணும்னு ஆசைப்பட்டேன். 

திருநங்கை ஷானவி

பொருளாதார ரீதியா உயர்ந்த இடத்துக்கு வரும் எண்ணத்தில் ஏர் இந்தியாவில் வேலைக்குப் பதிவுசெய்தேன். அப்போது, விண்ணப்பத்தில் ஆண், பெண் என்கிற இரண்டு பாலினம் மட்டுமே இருந்தது. மூன்றாம் பாலினத்தைத் தேர்வு பண்றதுக்கான வழிமுறை இல்லை. வேற வழியில்லாமல், பெண் என்பதைத் தேர்வுசெய்தேன். நேர்காணலுக்கு அழைப்பு வந்துச்சு. அதில் நல்லா ஃபர்பார்ம் பண்ணினேன். ஆனாலும், எனக்கு எந்தப் பதிலும் வரலை. இப்படி மூன்று முறை சிறப்பாகத் தேர்வு எழுதியும் நிராகரிக்கப்பட்டேன். விசாரிச்சதில், என்னுடைய பாலினம்தான் நிராகரிப்புக்குக் காரணம்னு தெரிஞ்சது'' என்கிற ஷானவி குரல் விம்முகிறது. 

சில நிமிடங்களுக்குப் பிறகு தொடர்கிறார், ''நானும் முடிஞ்ச அளவுக்கு இது விஷயமா போராடிப் பார்த்தேன். திறமை இருந்தும் ஏன் வேலை கொடுக்க மறுக்கறீங்கனு துறை சம்பந்தமான ஆட்களைச் சந்திச்சு கேட்க முயற்சி பண்ணினேன். ஆனால், யாரையும் நேரில் பார்க்கவே முடியலை. முறையான பதிலும் கொடுக்கலை. அப்புறம்தான், பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பினேன். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவுசெய்தேன். அதை விசாரித்த நீதிபதி, ஏர் இந்தியாவிடம் பதில் விளக்கம் கேட்டுத் தீர்ப்பு வழங்கினார். ஆனால், அந்த வழக்குக்கான சரியான பதிலையும் என்னால் பெறமுடியலை. 

திருநங்கை ஷானவி

இப்படி என் உரிமைக்காகத் தினம் தினம் போராடியே சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் தீர்ந்துபோச்சு. எனக்கும் மற்றவர்கள்போல சக மனுஷியாக இந்தச் சமூகத்தில் வாழணும்னு ஆசை. பெரிய வசதி வேண்டாம். என் சராசரி தேவையையே உழைச்சு செய்துக்க நினைக்கிறேன். அதுக்கு இந்தச் சமூகம் கொடுத்த பரிசுதான் இது. அடிப்படைத் தேவையையே பூர்த்தி செய்துக்க வழியில்லாத இந்தச் சமூகத்தில் ஏன் வாழணும். அதனால்தான் என்னைக் கருணைக் கொலை பண்ணச் சொல்லி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பினேன். இது தப்பா? போராடறதுக்கு உடம்பில் தெம்பு இருந்தாலும், இந்தச் சமூகம் என்னை வாழவிடாமல் துரத்தி துரத்தி மனசைக் கொல்லுது. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க?'' எனக் கலங்கியவாறு கேட்கிறார் ஷானவி. 

திருநங்கை ஷானவியின் கேள்விக்கு அரசும் சமூகமும் என்ன பதில் சொல்லப்போகிறது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement