வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (15/02/2018)

கடைசி தொடர்பு:18:14 (09/07/2018)

7 பேருந்துகள்... 450 உறவினர்கள்... ராமேஸ்வரம் கடலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் ஒரே வகையறாவைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்டவர்கள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் மறைந்த முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம்செய்து வழிபாடு செய்தனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தகடலில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தர்ப்பனம்


இந்துக்கள், மறைந்த தங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு அமாவாசை தினங்களில் சிறப்பு தர்ப்பணங்கள் செய்து வழிபாடு செய்வது வழக்கம். இதில் தை, ஆடி, புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில், நாட்டில் உள்ள புனித தலங்களில் உள்ள நீர்நிலைகளில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பதைப் பாரம்பர்யமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று, நாடு முழுவதும் மாசி அமாவாசைக் கடைப்பிடிக்கப்படுகிறது.

 சேலம் மாவட்டம் மேட்டூர், காவேரிபுரம், மேச்சேரி, லக்கம்பட்டி,கோவிந்தபுரம், சேத்துக்குழி, வெள்ளத்தூர் பகுதிகளிலிருந்து வீரகார குடும்ப வகையறாக்களைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்டவர்கள், மாசி அமாவாசை தினமான இன்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில், மறைந்த தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் நினைவாகக் கன்னியவர்ஷணவர்த்தி, நாகதோஷவர்த்தி, பிதர்ஷண வர்த்தி ஆகிய தோஷங்கள் நீங்க தர்ப்பணம் செய்தனர். இதற்கென குருசாமி என்பவரின் தலைமையில் சேலத்திலிருந்து 7 பேருந்துகளில் ராமேஸ்வரம் வந்திருந்தனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரையில், இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு ஒரே நேரத்தில் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடி, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

இநந்த் தர்ப்பணம் கொடுத்ததன்மூலம் தங்கள் குடும்பத்தில் நிலவிவரும் திருமணத் தடை, குழந்தை இன்மை, துர்மரணங்கள் போன்றவை விலகுவதுடன், நினைத்த காரியங்கள் கைகூட, மறைந்த தங்கள் முன்னோர்கள் ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த விசேஷ பரிகார தர்ப்பணத்தில் ஒரே வகையறாவைச் சேர்ந்தவர்கள், ஒட்டு மொத்தமாகப் பங்கேற்றனர்.