திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசிப் பெருந்திருவிழா வரும் 20-ம் தேதி தொடக்கம்! | Trichendur subramaniya swamy kovil masi festival started from coming 20th

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (15/02/2018)

கடைசி தொடர்பு:15:25 (15/02/2018)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசிப் பெருந்திருவிழா வரும் 20-ம் தேதி தொடக்கம்!

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசிப் பெருந்திருவிழா வரும் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 1-ம் தேதி நடைபெறுகிறது

திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதில் மாசிப் பெருந்திருவிழா மிக முக்கியமானதாகும். இந்த ஆண்டு மாசி திருவிழா வரும் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவற்றைத் தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கும்ப லக்கனத்தில் கோயிலின் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது.

24-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெறும். 26-ம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அதைத் தொடர்ந்து 9  மணிக்கு மேல் ஆறுமுகநயினார், வெற்றி வோ் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு மேல் சிவன் அம்சத்தில் தங்கச் சப்பரத்தில் சிகப்பு சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருச்செந்தூர்

27-ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை 11.30 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.  மார்ச் 1-ம் தேதி 10-ம் திருவிழா அன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. மார்ச் 2-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

நடை திறப்பு நேரம் மாற்றம்

திருவிழாவை முன்னிட்டு நடைதிறப்பு நேரங்களில் மாற்றம் குறித்து இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”திருவிழாவை முன்னிட்டு  20 மற்றும்  26 ஆகிய தேதிகளில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 21, 23 மற்றும் 24-ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. திருவிழாவின் மற்ற நாள்களில் கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க