வரிபாக்கி வைத்த 40 நிறுவனங்களின் பட்டியல்! நெல்லை மாநகராட்சி வெளியீடு

நெல்லை மாநகராட்சியில் வரி பாக்கி வைத்துள்ள 40 நிறுவனங்களின் பட்டியலைப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மாநகராட்சி அலுவலகம் முன்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 
 

வரி பாக்கி பட்டியல்

நெல்லை மாநகரப்பகுதியில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். நெல்லை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரியினங்கள் மூலமாகவே பெருமளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. அதைக்கொண்டே மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கான சம்பளமும் மக்களுக்கான அடிப்படைப் பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனாலும், பெரும்பாலான தனிநபர்களும் தொழில் நிறுவனங்களும் வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கிறார்கள். 

வர்த்தக நிறுவனங்கள் வரி செலுத்தாமல் பாக்கி வைத்தால், அந்த நிறுவனத்தின் முன்பாகக் குப்பைத் தொட்டிகளை வைப்பதை மாநகராட்சி நிர்வாகம் வழக்கமாக வைத்திருக்கிறது. ஆனாலும்கூட சில நிர்வாகங்கள் வரியைச் செலுத்தாமல் மாநகராட்சிக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி வந்தன. அந்த நிறுவனங்களை வரி செலுத்துமாறு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியபோதிலும் அசைந்து கொடுக்காமல் இருந்ததால், வரி நிலுவை வைத்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது.

நெல்லையில் உள்ள தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, நெல்லை மண்டலங்களில் வரி செலுத்துவதில் பாக்கி வைத்திருக்கும் தலா 10 நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. மொத்தம் 40 நிறுவனங்களின் பெயர்கள் ஃப்ளெக்ஸ் போர்டுகளில் அச்சிடப்பட்டு நெல்லை மாநகராட்சி மத்திய அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 4 மண்டல அலுவலகங்களிலும் வரி பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலையும் மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்டுயிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!